செய்திகள்
அத்திவரதர்

கூட்ட நெரிசலை தவிர்க்க கட்டுப்பாடு- இன்று முதல் அத்தி வரதரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும்

Published On 2019-07-19 06:15 GMT   |   Update On 2019-07-19 06:15 GMT
காஞ்சிபுர வரதராஜ பெருமாள் கோயிலில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இன்று முதல் அத்தி வரதரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தின் அனந்தசரஸ் எனும் புனித குளத்தினுள் நீருக்கு அடியில் வைக்கப்பட்டுள்ள அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு தர்சனம் அளிக்கிறார்.  40 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இந்த சிலையை தண்ணீருக்கு அடியில் இருந்து எடுத்து வந்து, 48 நாட்களுக்கு தரிசனம் செய்யும் நடைமுறை பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. அவ்வகையில் கடந்த 1-ம் தேதி முதல் அத்தி வரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

கோவில் உள்ளே வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதர் சிலையை முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும் அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் தரிசனம் என்பதால் வார நாட்களில் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் பக்தர்களும், சனி, ஞாயிறுக்கிழமைகளில் சுமார் 2 லட்சம் பக்தர்களும் அத்திவரதரை காண வருகிறார்கள்.



18-வது நாளான நேற்று திருவோணம் நட்சத்திரம் என்பதால் பெருமாளுக்கு உகந்த நட்சத்திர தினத்தன்று வழிபட வேண்டும் என்ற எண்ணத்தில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டனர். கிழக்கு கோபுர வாசலில் கூட்ட நெரிசல் அதிகமானது. மாலை சுமார் 4 மணி அளவில் பக்தர்கள் மத்தியில் பரவிய புரளி காரணமாக நெரிசல் அதிகரித்தது. பக்தர்கள் ஒருவரை ஒருவர் தள்ளியபடி சென்றதால் பக்தர்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளானார்கள். பலர் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பக்தர்கள் மத்தியில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இன்று முதல் மூலவர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், அத்தி வரதரை மட்டுமே தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார். இதேபோல் நெரிசலை தவிர்ப்பதற்காக முக்கிய பகுதிகளில் அதிக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News