செய்திகள்
புதுவை சட்டசபை

புதுவை சட்டசபையில் 22-ந்தேதி சிறப்பு கூட்டம்

Published On 2019-07-19 05:59 GMT   |   Update On 2019-07-19 06:13 GMT
நீர் மேலாண்மைக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டு தீர்மானம் நிறைவேற்ற புதுவை சட்டசபையில் சிறப்பு கூட்டம் வருகிற 22-ந்தேதி கூடுகிறது.
புதுச்சேரி:

மத்திய அரசு நீர் மேலாண்மைக்காக ஜலசக்தி என்ற தனி துறையை புதிதாக உருவாக்கி உள்ளது.

ஜலசக்தி துறையின் மூலம் நீர் மேலாண்மை திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு எங்கு உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு நீர் மேம்பாட்டு திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.

இதற்காக மத்திய அரசு 255 அதிகாரிகளையும், அவர்களின் கீழ் 550 குழுக்களையும் நியமித்துள்ளது. இவர்கள் மாநிலம் தோறும் சென்று நீர் மேலாண்மை நிபுணர்கள், சமூக சேவை அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்வார்கள்.

நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பது, மழை நீரை சேகரிப்பது, புதிய நீர்நிலைகளை உருவாக்குவது, பழைய நீர்நிலைகளை புதுப்பித்து சேமிப்பு திறனை அதிகப்படுத்துவது, வீணாக கடலுக்கு செல்லும் நீரை தடுப்பது, ஆழ்குழாய் கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் செய்வது. மழையை அதிகரிக்க காடுகளை அதிகமாக்குவது ஆகியன குறித்து முழுமையாக இந்த குழு ஆய்வு செய்யும்.

ஆய்வுக்கு பிறகு குழுவினரின் சிபாரிசு அடிப்படையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக ஜலசக்தி துறைக்கு 70 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜலசக்தி துறையிடம் இருந்து நிதி பெற அனைத்து மாநிலங்களும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. இதற்கு அந்தந்த மாநிலங்களின் சட்டசபையில் நீர் மேம்பாடு குறித்து விவாதித்து, மத்திய குழுவை ஆய்வு செய்ய வரவேற்றும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இதற்காக புதுவை சட்டசபையில் சிறப்பு கூட்டம் வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை புதுவை சட்டமன்ற செயலாளர் வின்சென்ட் ராயர் பிறப்பித்துள்ளார்.

அன்று ஒருநாள் மட்டும் நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தில் புதுவை மாநிலத்தின் நீர்நிலைகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு மத்திய அரசிடம் நிதி கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அத்துடன் கூட்டம் நிறைவு பெறுகிறது.

புதுவை சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினங்களுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதனால் ஆகஸ்டு மாதத்துக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக திட்டக்குழு கூடி ரூ.8 ஆயிரத்து 455 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அனுமதி கேட்டு கோப்பு அளித்துள்ளது.

இதற்கான அனுமதி கிடைத்தவுடன் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்தில் புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்.
Tags:    

Similar News