செய்திகள்
சாலை

பாதையே இல்லாத பகுதிக்கு ரூ.19 லட்சத்தில் சாலை - புலம்பித்தவிக்கும் பொதுமக்கள்

Published On 2019-07-18 10:44 GMT   |   Update On 2019-07-18 10:44 GMT
சாலை வேண்டி கோரிக்கை விடுத்த டி.குன்னத்தூர் பகுதிக்கு சாலை போடாமல் பாதையே இல்லாத பகுதிக்கு ரூ.19 லட்சத்தில் சாலை அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் புலம்பி தவிக்கின்றனர்.
பேரையூர்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலை அமைத்து சாலையை இணைக்காமல் அப்படியே விட்டு விட்டதால் ரூபாய் 19 லட்சம் அரசு பணம் வீண் அடைந்துள்ளது.

இதுதொடர்பாக இப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர்.

திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூரில் ஏ. தொட்டியபட்டி செல்வதற்காக கிராம மக்கள் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் டி. குன்னத்தூரில் இருந்து தொட்டியபட்டி கிராமத்திற்கு ஊரக இணைப்பு சாலை அமைத்தால் ஒரு கிலோமீட்டர் தூரம்தான் செல்ல வேண்டி இருக்கும்.

9 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என கிராம மக்கள் ஊரக இணைப்புச் சாலை வேண்டும் என பல்வேறு கோரிக்கை மனுக்களை டி கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு புதிய ஊரக இணைப்புச்சாலை அமைக்க வேண்டி இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஊரக இணைப்புச்சாலை டி.குன்னத்தூர் கிராமத்தில் இருந்து ஏ தொட்டியப்பட்டி வரை ரூபாய் 19 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டு 2018 செப்டம்பரில் முடிவுற்றது. ஒரு கிலோ மீட்டர் தூரம் புதிய செம்மண் சாலை அமைக்கப்பட்டது.

ஆனால் திருமங்கலம் ராஜபாளையம் நெடுஞ்சாலையில் இணைப்புச் சாலை அனுமதி வாங்காததால் கடந்த ஒரு ஆண்டுகளாக ரூபாய் 19 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தும் எவ்வித பயனில்லாத நிலையில் சாலைகள் உள்ளது.

மேலும் மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாததால் சாலைகள் செம்மண் கரைந்து மோசமான நிலையில் உள்ளது.

ஆதலால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று நெடுஞ்சாலை துறையுடன் ஊராட்சி இணைப்புச் சாலையை இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் இணைப்பு இல்லாத பாதைக்கு ரூபாய் 19 லட்சம் வீண் செலவு செய்துள்ளதாகவும் முறையாக அனுமதி பெற்று பின்பு சாலை அமைத்து இருக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் புலம்புகின்றனர்.

உடனடியாக அனுமதி பெற்று இணைப்புச் சாலையை திறந்துவிட வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Tags:    

Similar News