செய்திகள்
ஊசுடு ஏரி

ஊசுடு ஏரியில் 9 இடங்களில் செயற்கை திட்டுகள் - பறவைகள் வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை

Published On 2019-07-18 03:32 GMT   |   Update On 2019-07-18 03:32 GMT
பறவைகள் சரணாலயமான ஊசுடு ஏரி தண்ணீரின்றி குட்டையாக காணப்படுவதால் பறவைகள் வெளியேறாமல் தடுக்க அங்கு 9 இடங்களில் செயற்கை திட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தின் மிகப்பெரிய நீராதாரமாக ஊசுடு ஏரி உள்ளது. இந்த ஏரி 800 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்டது. இதில் 390 ஹெக்டேர் நிலப்பரப்பு புதுச்சேரி பகுதியிலும் மீதமுள்ள நிலப்பரப்பு தமிழக பகுதியிலும் உள்ளது.

தமிழக, புதுச்சேரி அரசுகள் இந்த ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளன. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் மாதம் வரை உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான பறவைகள் இங்கு வருகின்றன. குறிப்பாக பெலிக்கான், நாரை உள்ளிட்ட பறவைகள் இங்கு அதிக அளவில் வருகின்றன. ஊசுடு ஏரி பகுதியில் 166 விதமான பறவைகள் மற்றும் பூச்சியினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஏரி மழை இல்லாததால் தண்ணீரின்றி குட்டை போல் காட்சி அளிக்கிறது. இதனால் பறவைகள் தொடர்ந்து இங்கு வசிக்கும் விதமாக திட்டு போன்ற அமைப்புகளை உருவாக்க தனியார் அமைப்புகள் முன்வந்துள்ளன. ஐ.பி.எப். மற்றும் ஆரண்யம் பவுண்டேசன் அமைப்புகள் சார்பில் செயற்கையான திட்டுகளை அமைக்க வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு வனத்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து தற்போது செயற்கை திட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதாவது கரையில் இருந்து 150 மீட்டர் தொலைவில் 3 ஹெக்டேர் பரப்பளவில் 9 திட்டுகள் அமைக்கப்படுகின்றன.

இதற்காக ஜே.சி.பி. மூலம் ஏரிக்குள்ளேயே பள்ளம் தோண்டி சுமார் 10 அடி உயரத்துக்கு மண்ணை கொட்டுகின்றனர். மண் எடுக்க தோண்டப்படும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கும். அந்த தண்ணீரை பறவைகள் பயன்படுத்த ஏதுவாக அமையும்.

இந்த செயற்கை திட்டுகளில் மர வகைகளும் நடப்பட உள்ளன. இந்த நடவடிக்கையால் கோடைக்காலத்தில் தண்ணீர் இல்லாமல் பறவைகள் இங்கிருந்து வெளியேறி செல்வது தடுக்கப்படும். மேலும் ஊசுடு ஏரியில் தண்ணீர் தேங்கும்போது படகு சவாரி செய்பவர்கள் இந்த செயற்கை திட்டுகளை சுற்றி வந்து ரசிக்க கூடியதாக இருக்கும். இதற்கிடையே ஊசுடு ஏரி பகுதியினை அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நடைபாதைகளில் வெள்ளை கற்கள் பதித்தல், பசுமையான புற்கள் நடுதல் போன்ற பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

Tags:    

Similar News