செய்திகள்
தங்க நகை திருட்டு மாதிரிபடம்

தாய்-மகளின் கழுத்தில் கத்தியை வைத்து 13 பவுன் நகை கொள்ளை

Published On 2019-07-17 18:18 GMT   |   Update On 2019-07-17 18:18 GMT
முத்துப்பேட்டை அருகே தாய், மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.2¾ லட்சத்தை துணிகரமாக கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் மங்களநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 54). விவசாயி. இவருடைய மனைவி உமாராணி(43). இவர்களுடைய மகள் ரம்யா(24). மகன் மனோபாலா(28). இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராமகிருஷ்ணன் கோவிலுக்கு சென்று இருந்தார். இதனால் உமாராணி, ரம்யா ஆகிய இருவர் மட்டும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் வீட்டின் வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இதையடுத்து உமாராணி தனது கணவர் ராமகிருஷ்ணன் தான் வீட்டுக்கு வருகிறார் என்று நினைத்து வாசல் கதவை திறந்தார். அப்போது முகமூடி அணிந்து இருந்த மர்ம நபர்கள் 2 பேர் வீட்டுக்குள் திடீரென புகுந்து உமாராணி, அவருடைய மகள் ரம்யா ஆகியோரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.

பின்னர் மர்ம நபர்கள் 2 பேரும் பீரோவில் இருந்த சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உமாராணி, ரம்யா ஆகியோர் கூச்சல் போட்டனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றவர்களை துரத்தினர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கொள்ளையர்களில் ஒருவர் தனது செல்போனை தவற விட்டு சென்றது தெரிய வந்தது. அந்த செல்போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் திருவாரூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் ராமச்சந்திரன், சரவணன் ஆகியோர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். கொள்ளை போன பணம் மற்றும் நகையை ராமகிருஷ்ணன் தனது மகள் ரம்யாவின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்தார். இந்த நிலையில் அவற்றை மர்ம நபர்கள் துணிகரமாக கொள்ளையடித்து சென்றது அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமகிருஷ்ணன், முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.  
Tags:    

Similar News