செய்திகள்
சந்திரயான்-2

கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது - சந்திராயன்-2 இந்த மாத இறுதிக்குள் ஏவப்படுகிறது

Published On 2019-07-17 05:24 GMT   |   Update On 2019-07-17 07:04 GMT
தொழில் நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் சரி செய்யப்பட்டு இந்த மாத இறுதிக்குள் அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை:

நிலவில் தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழ முடியுமா? என்பதை ஆராய்ச்சி செய்ய கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன்-1 விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தியது.

சுமார் 400 நாட்கள் நிலவை ஆய்வு செய்த சந்திரயான் விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து நிலவில் மீண்டும் அடுத்தக்கட்ட ஆய்வை மேற்கொள்ள இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன்-2 விண்கலத்தை சுமார் ரூ.1000 கோடி செலவில் தயாரித்துள்ளனர். நிலவின் தென்பகுதியில் இதுவரை எந்த நாடும் விண்கலத்தை தரை இறக்கியதில்லை. எனவே சந்திராயன்-2 விண்கலத்தை நிலவின் தென்பகுதியில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இதன் காரணமாக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவது அடுத்தடுத்து 4 தடவை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை சந்திராயன்-2 விண்ணில் ஏவ அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஜி.எஸ்.எல்.வி-ராக்கெட்டில் எரி பொருள் நிரப்பும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படுவது கடைசி நிமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பி.எஸ்.எல்.வி- ராக்கெட்டில் நிரப்பப்பட்ட அனைத்து வகை எரி பொருட்களும் வெளியேற்றப்பட்டன. பிறகு தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தொடங்கியது.

கோளாறு காரணமாக சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் பறக்க விடுவது சில வாரங்களுக்கு தள்ளிப் போகலாம் என்று கருதப்பட்டது. செப்டம்பர் மாதம் தான் அதை விண்ணில் செலுத்த முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் இதுபற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லாமல் இருந்தனர்.

இந்த நிலையில் சந்திராயன்-2 விண்கலத்தை ஏவும் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு மிக, மிக சிறிய கோளாறுதான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கோளாறு ஓரிரு நாட்களில் சரி செய்யப்பட்டு விடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சந்திராயன்-2 விண்கலத்தை உடனே விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

நிலவின் தென்பகுதியில் சூரியஒளி இருக்கும் சமயத்தில் சந்திராயன்-2 விண்கலத்தை தரை இறங்க செய்யும் வகையில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாத இறுதியில் சில நாட்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த மாத இறுதிக்குள் சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 29-ந்தேதி விண்ணில் ஏவலாம் என்று ஏற்கனவே ஒரு திட்டம் உள்ளது.

ஆனால் அதற்கு முன்பு 23-ந்தேதியே சந்திராயனை ஏவ முயற்சி நடந்து வருகிறது. அது உறுதி செய்யப்பட்டால் திங்கட்கிழமை அதற்கான கவுண்டவுன் தொடங்கும்.
Tags:    

Similar News