செய்திகள்
முக ஸ்டாலின்

தமிழில் தபால்துறை தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிப்பு- முக ஸ்டாலின் வரவேற்பு

Published On 2019-07-17 02:44 GMT   |   Update On 2019-07-17 02:44 GMT
தபால்துறை போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு தி.மு.க.வின் போராடும் குணத்துக்கு கிடைத்த வெற்றி என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
சென்னை :

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தபால்துறை போட்டித் தேர்வுகள் தமிழ் மொழியில் நடத்தப்படும் என்று மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிவித்து இருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பினைப் பாதிக்கும் வகையில், தபால்துறையின் சார்பில் கடந்த 14-ந் தேதி இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் நடத்தப்பட்ட போட்டித் தேர்வினை ரத்து செய்திருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது.

தபால்துறையில் வேலை வாய்ப்புகளுக்காக தமிழில் நடைபெற்று வந்த போட்டித் தேர்வினை திடீரென்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்துவோம் என்று சுற்றறிக்கை வெளியான உடன், முதலில் தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியிடமும் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தமிழக சட்டமன்றத்திலும் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், இந்த பிரச்சினை குறித்து சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளில் தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டது.



தி.மு.க. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், இரு அவைகளிலும் இது குறித்து பிரச்சினையை கிளப்பி, கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமின்றி, மீண்டும் தபால்துறைத் தேர்வுகளை தமிழிலும், மாநில மொழிகளிலும் நடத்திட வேண்டும் என்று தீவிரமாக அழுத்தம் கொடுத்து வந்தனர். தமிழக இளைஞர்களின் நலனுக்காக மாநிலங்களவையில் தொடர்ந்து வலிமையாகப் போராடி மத்திய அரசின் கவனத்தையும், இந்த கோரிக்கையினை வலியுறுத்தி மாநிலங்களவைத் தலைவரின் கவனத்தையும் ஈர்த்து தமிழகத்தின் உரிமைகளுக்காக, தமிழ் மொழியின் உரிமைக்காக பாராட்டுக்குரிய பணிகளில் தி.மு.க. உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தி.மு.க.வின் உறுதியாக வாதாடும்-போராடும் குணத்துக்கு கிடைத்த இன்னொரு வெற்றியாக ‘தேர்வு ரத்து’ என்றும் ‘தமிழ் மொழியிலும் இனிமேல் தேர்வு’ என்ற அறிவிப்பை மத்திய சட்டத்துறை மந்திரி வெளியிட்டுள்ளார். தி.மு.க. வெற்றி பெற்று என்ன சாதிக்கப் போகிறது என்று வீண்வாதம்-விதண்டாவாதம் செய்தவர்களுக்கு இப்போது கிடைத்துள்ள வெற்றி, நிரந்தரமான வாய்ப்பூட்டு போடும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Tags:    

Similar News