செய்திகள்
அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் நீர்மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் சென்றபோது எடுத்த படம்

பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்

Published On 2019-07-16 18:17 GMT   |   Update On 2019-07-16 18:17 GMT
பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நீர்மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.
வையம்பட்டி:

திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த ஊனையூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் காமராஜரின் உருவம் பொறித்த முகமூடிகளை அணிந்து கொண்டும், சில மாணவிகள் நீர்மேலாண்மை குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தண்ணீர் நிரப்பப்பட்ட குடங்களையும், மாணவர்கள் மரக்கன்றுகளையும் எடுத்து வந்தனர். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து கல்விக்கு வழி வகுப்போம், மழைநீரை சேமிப்போம், நிலத்தடி நீரை பாதுகாப்போம், நீரை சிக்கனமாக பயன்படுத்தி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவோம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். பின்னர் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியர் நரசிம்மவர்மர் தலைமை தாங்கி பேசினார். ஆசிரியை சந்திரா காமராஜரின் பெருமைகள் பற்றி எடுத்துக்கூறினார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே காமராஜர் பற்றி பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஆசிரியை முத்துச்செல்வி வரவேற்று பேசினார். முடிவில் ஆசிரியை எலிசபெத்ராணி நன்றி கூறினார்.

இனாம்குளத்தூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை விராகவல்லி தலைமை தாங்கி பேசினார். விழாவையொட்டி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியர் யாகத்அலி நன்றி கூறினார்.

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மற்றும் ஆரம்பப்பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி 175 மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் அரிமா சங்கத்தலைவர் வாசுதேவன், செயலாளர் சர்புதீன், பொருளாளர் மணிகண்டன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News