செய்திகள்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தவிக்கும் குடும்பம்

ராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்

Published On 2019-07-15 08:23 GMT   |   Update On 2019-07-15 08:23 GMT
நடிகர் ராகவா லாரன்சிடம் உதவி கேட்பதற்காக ராஜபாளையத்தில் இருந்து சென்னை வந்த குடும்பம், எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் தஞ்சமடைந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 10-வது நடைமேடை.

கையில் சிறு மூட்டை முடிச்சுகளுடன் பரிதாபமாக அமர்ந்து இருக்கும் ஒரு இளம்பெண், அருகில் ஒரு வாலிபர். அவர்களுக்கு மத்தியில் நோய் வாய்ப்பட்ட ஒரு சிறுவன்.

அவர்களை பார்த்து மனம் இறங்கும் பயணிகள் கொடுக்கும் அஞ்சும், பத்தும்தான் அந்த மூன்று உயிர்களையும் தாங்கி பிடிக்கிறது.

துயரம் நிறைந்த அவர்களது வாழ்க்கை கதையை கேட்டாலே கண்ணீர் பெருக்கெடுக்கும்.

அந்த பெண்ணின் பெயர் குருலட்சுமி. அருகில் இருப்பவர் அவரது தம்பி வெங்கடேசன். சிறுவன் குரு சூரியா. குருலெட்சுமியின் ஒரே மகன்.

சொந்த ஊர் ராஜபாளையம். குருலட்சுமிக்கு தன் சக்திக்கு இயன்ற வகையில் சிறப்பாக திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு குரு சூரியா பிறந்ததும் உற்சாகம் கரைபுரண்டது. தாய் மாமன் வெங்கடேசன் அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

ஆனால் மகிழ்ச்சி இழையோடிய அந்த குடும்பத்தை விசித்திரமான நோய் புகுந்து சின்னா பின்னமாக்கியது.


திடீரென்று குருசூரியா நடக்க முடியாமல் ஆனார். ஓரிரு வருடங்களில் பேசவும் முடியவில்லை. அதன் பிறகு சீராக இயங்கிய இதயம் எப்போதும் படபட என்று அடிக்க தொடங்கியது. இப்போதெல்லாம் செல்போன் மணி ஒலித்தாலே அதை தாங்க முடியாமல் கீழே விழுந்து விடுகிறான்.

மகனை தோளில் தூக்கி கொண்டு பல ஆஸ்பத்திரிக்கு அலைந்தும் பலன் இல்லை. இந்த நிலையில் பிரிந்து சென்ற கணவரும் விவாகரத்து வழக்கு தொடர மொத்த குடும்பமும் நொறுங்கி போனது.

மகனை எப்படி காப்பாற்றுவது? எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று கண்ணீரில் மிதந்த குருலட்சுமியை பார்க்க பார்க்க வெங்கடேசின் இதயம் துடித்தது.

சகோதரிக்காக தனது திருமணத்தை தியாகம் செய்த வெங்கடேசன் குரு சூரியாவை எப்படியாவது சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கிறார்.

அப்போதுதான் அவரிடம் சென்னை சென்று நடிகர் ராகவா லாரன்சை பாருங்கள், மருத்துவ உதவி செய்வார் என்று கூறி இருக்கிறார்கள்.

அதை நம்பி மூவரும் சென்னை வந்தனர். ஆனால் அவர்களால் லாரன்சின் முகவரியை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

ஊருக்கு திரும்பவும் முடியாமல், மகனுக்கு சிகிச்சை அளிக்கவும் முடியாமல் கடந்த சில தினங்களாக பிளாட்பாரத்திலேயே தங்கி இருக்கிறார்கள்.

வாலிபர் வெங்கடேசன் ஒவ்வொருவராக அணுகி ஏதாவது சுத்தம் செய்யும் வேலையாவது தாருங்கள். செய்கிறேன் என்று கேட்டு வருவது பரிதாபமாக உள்ளது.

திரைக்காவியம் பாசமலரையும் விஞ்சி விட்ட பாச மலர்களின் எதிர்காலம் விடை தெரியாத கேள்விக்குறியாக நிற்கிறது.
Tags:    

Similar News