செய்திகள்
கமல்ஹாசன்

தண்ணீரை சேமிக்க அரசை எதிர்பார்க்காமல் தனிநபர் பங்களிக்க வேண்டும் - கமல்ஹாசன்

Published On 2019-07-15 02:54 GMT   |   Update On 2019-07-15 02:54 GMT
தண்ணீரை சேமிக்க அரசை எதிர்பார்க்காமல் தனிநபர் பங்களிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள், நடன இயக்குனர்கள் சங்க தேர்தல் சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. இதில் உறுப்பினராக அங்கம் வகிக்கும் கமல்ஹாசன், தேர்தலில் வாக்களித்து விட்டு வெளியே வந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள் இருக்கிறார்கள். நடன மணிகளும் இருக்கிறார்கள். இந்த கூட்டம் (நடன கலைஞர்கள்) தொடர்ந்து செயல்பட வேண்டும். பல திறமைகளை வளர்க்க வேண்டும். இதற்காகவே நான் வந்திருக்கின்றேன். திரையுலகில் எனக்கு உள்ள பல வீடுகளில், முக்கியமான வீடு.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள், நடன இயக்குனர்கள் தேர்தலில் வெற்றிப்பெற போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள். நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் விவகாரத்தில் நியாயமான முறையில் சட்டப்பூர்வமாக முடிவு எடுக்கவேண்டும் என்பது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆர்ப்பாட்டமோ, அதட்டலோ நடக்காது. இது ஒரு குடும்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தபால் துறை தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் தேர்வு எழுத முடியும் என்று கூறப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- மாணவர் பருவத்தில் இருந்தே மறுத்துக்கொண்டிருக்கிறோம். இப்போது மனம் மாற்றம் அடைந்திருக்கும் என்று மத்திய அரசு நினைப்பது ஆச்சரியம் அளிக்கிறது. தமிழகத்தில் அந்த மனமாற்றம் ஏற்படவே ஏற்படாது என்று உறுதியாக, உயிர் துடிப்பு உள்ள ஒரு தமிழனாக கூறுகிறேன்.



கேள்வி:- தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை நிலவுகிறது. மழை பெய்தபோதிலும் முறையாக சேமிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறதே...

பதில்:- சேமிப்பு மட்டும் தான் தண்ணீர் பிரச்சினைக்கு ஒரே வழி. அரசை எதிர்பார்க்காமல் தண்ணீரை சேமிக்க தனிநபர் பங்களிக்க வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

Tags:    

Similar News