செய்திகள்
சந்திரயான்-2 விண்கலம்

சந்திரயான்-2 நாளை விண்ணில் பாய்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் பார்க்கிறார்

Published On 2019-07-13 20:22 GMT   |   Update On 2019-07-13 20:22 GMT
நிலவில் ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது. இதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் பார்க்கிறார்.
ஸ்ரீஹரிகோட்டா:

நிலவில் ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-1 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2008-ம் ஆண்டு அனுப்பியது. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை அது உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.

நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக ‘ஆர்பிட்டர்‘ என்ற சாதனம், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய ‘லேண்டர்‘ என்ற சாதனம், நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ‘ரோவர்‘ என்ற சாதனம் என மொத்தம் 3 சாதனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்ப நிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

சந்திரயான்-2 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்தியாவின் கனமான ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் பாய்கிறது.

அதற்கான 20 மணி நேர கவுண்ட் டவுண் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.51 மணிக்கு தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

விண்ணில் ஏவிய 16 நிமிடங்களில் புவி சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 செலுத்தப்படும். பின்னர், நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு விண்கலம் மாறும். அந்த பாதையில் 45 நாட்கள் பயணித்து, செப்டம்பர் 6-ந் தேதி நிலவை சென்றடையும்.

நிலவின் மேற்பரப்பில் அந்த விண்கலத்தின் ரோவர் வாகனம் தரை இறக்கப்பட்டு சோதனையில் ஈடுபடும். விண்கலத்தை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

“மழை பெய்தாலும் சந்திரயான்-2 திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படும்” என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார். அனைத்து சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.



சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுவதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிடுகிறார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஆந்திர கவர்னர் நரசிம்மன், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரும் நேரில் பார்வையிடுகிறார்கள்.

இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் பார்வையிடுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
Tags:    

Similar News