செய்திகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்

குரூப்-1 முதன்மை தேர்வு: முதல்தாள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து

Published On 2019-07-13 02:52 GMT   |   Update On 2019-07-13 02:52 GMT
181 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது. முதல் தாள் தேர்வு சற்று எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
சென்னை:

181 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது. சப் கலெக்டர்- 27, துணை போலீஸ் சூப்பிரண்டு- 90, வணிகவரி உதவி கமிஷனர்- 18, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்- 13, மாவட்ட பதிவாளர் - 7, கிராம மேம்பாடு உதவி இயக்குனர்- 15, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 8, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர்- 3 ஆகிய 181 குரூப்-1 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி நடைபெற்றது. விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 490 பேர் அந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வெளியானது.

இதையடுத்து முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது. முதன்மை தேர்வு மொத்தம் 3 தாள்களை கொண்டதாக இருக்கும். நேற்று முதல் தாள் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது.

சென்னையில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 95 இடங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வை 9 ஆயிரத்து 441 பேர் எழுதுவதாக ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

முதல் தாள் தேர்வில் நவீன வரலாறு, சமூக பொருளாதார விவகாரங்கள், பொது திறன் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.

வரலாறு, சமூக பொருளாதார விவகாரங்கள் பிரிவில் 10 மற்றும் 15 மதிப்பெண் வினாக்கள் தலா 5 கொடுக்கப்பட்டு 4 வினாக்களுக்கும், பொதுத்திறன் பிரிவில் 10 மற்றும் 15 மதிப்பெண் வினாக்கள் தலா 3 கொடுக்கப்பட்டு 2 வினாக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும். மொத்தம் 250 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடந்தது.

முதல் தாள் தேர்வு சற்று எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். 2-ம் தாள் தேர்வு இன்றும் (சனிக் கிழமை), 3-ம் தாள் தேர்வு நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. 
Tags:    

Similar News