செய்திகள்
வேலூர் தொகுதி

வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க 2 பார்வையாளர்கள் நியமனம்

Published On 2019-07-12 09:51 GMT   |   Update On 2019-07-12 09:51 GMT
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க 2 பார்வையாளர்களை நிமித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நடவடிக்கை எடுத்துள்ளார்.
வேலூர்:

பாராளுமன்ற தேர்தலின் போது வேலூர் தொகுதியில் பெரிய அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் நிறுத்தப்பட்டது.

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது.

அந்த தொகுதியில் பணம் நடமாட்டத்தை தடுக்க தேர்தல் துறை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி விவரம்:-

கேள்வி: வேலூர் தொகுதியில் இந்த தடவை பண நடமாட்டத்தை தடுக்க என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?

பதில்: தமிழ்நாட்டில் தேர்தல் செலவு விவகாரத்தில் மிகுந்த பிரச்சனைகள் உள்ளன என்பதை தேர்தல் கமி‌ஷன் நன்றாக அறிந்துள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இப்போது கடுமையான கண்காணிப்புகள் செய்யப்படும். தேர்தல் கமி‌ஷனின் வழிகாட்டுதல்களை மிக உறுதியாக பின்பற்றுவோம். இதற்காக மத்திய தேர்தல் கமி‌ஷன் 2 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து இருக்கிறது. ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளான வினய்குமார், ஆர்.ஆர்.என். சுக்லா ஆகியோர் இந்த பணிகளுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கே: கடந்த தடவை ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு சொந்தமான இடத்தில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். அப்படியானால் தேர்தல் கமி‌ஷன் எடுத்த நடவடிக்கைகள் வீணாகி விட்டதா?

ப: ஒரு வேட்பாளரை எப்போது தகுதி நீக்கம் செய்யலாம் என்பதில் தேர்தல் விதிமுறைகள் தெளிவாக உள்ளது. வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார் என்பதற்காக அவருக்கு தடை விதிக்க முடியாது. சுதந்திரமான, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது தான் தேர்தல் கமி‌ஷனின் கொள்கை ஆகும்.

கே: தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு சொந்தமான இடத்தில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர் மீது வருமான வரித்துறை மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தேர்தல் கமி‌ஷன் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுத்தது? அது இப்போது என்ன நிலையில் உள்ளது?

ப: அந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணப் பொட்டலங்களில் சில லேபிள்கள் இருந்தன. வருமான வரித்துறை சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றியது. அவர்களுக்குள்ள விதிகள்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுபற்றி சில வி‌ஷயங்களை நாங்கள் வெளியிட முடியாது.

கே: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் கோர்ட்டில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வி‌ஷயத்தில் தேர்தல் கமி‌ஷன் என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது?

ப: இந்த வழக்கை பொறுத்தவரை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து அறிக்கையை தரும்படி தேர்தல் கமி‌ஷன் கேட்டது. அவர் ஐகோர்ட்டில் உள்ள தேர்தல் கமி‌ஷன் வக்கீலிடமிருந்து அறிக்கை பெற்று தர வேண்டும். ஆனால் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து இன்னும் எங்களுக்கு அறிக்கை வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News