செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

சென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்- அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் செல்கிறார்

Published On 2019-07-12 09:32 GMT   |   Update On 2019-07-12 09:32 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை முதல்வர், துணை முதல்வர் வரவேற்றனர்.
சென்னை:

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தவண்ணம் உள்ளனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு  தரிசன வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.



இந்நிலையில், அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்தார். மதியம் 2 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்

பின்னர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் புறப்பட்டார். அங்கு அத்திவரதரை தரிசனம் செய்கிறார்.  ஜனாதிபதி வருகையையொட்டி, காஞ்சிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்களின் தரிசனமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்திவரதர் தரிசனத்தை முடித்துக்கொண்டு, ஹெலிகாப்டரில் மீண்டும் மாலை 5 மணியளவில் சென்னை விமானநிலையம் வரும் ஜனாதிபதி, அங்கிருந்து காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

நாளை மாலை சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் திருமலை செல்கிறார். நாளை இரவு திருமலையில் தங்கும் அவர், மறுநாள் (14-ம்தேதி) காலை வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்கிறார். மாலை திருமலையில் நடைபெறும் ஆர்ஜித சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும்  பங்கேற்கிறார்.

15-ந்தேதி காலை ஜனாதிபதி தனது குடும்பத்தினருடன் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
Tags:    

Similar News