செய்திகள்
தஞ்சை அண்ணாசிலை பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

தஞ்சையில் காற்றுடன் பெய்த மழை: விவசாயிகள்-பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2019-07-11 10:27 GMT   |   Update On 2019-07-11 10:27 GMT
தஞ்சையில் ஒரு மணிநேரம் காற்றுடன் மழை பெய்ததால் விவசாயிகள்-பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூர்:

கோடை காலம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. தொடர்ந்து அக்னி நட்சத்திரம் முடிந்தும் கடந்த 2 மாதங்களாக தஞ்சை மாவட்டத்தில் அனல் காற்றுடன் கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகினர்.

இந்ந நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் உக்கிரத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து மண்ணையும், மனதையும் குளிரவித்த மழை ஏனோ தஞ்சை மாவட்டம் பக்கம் மட்டும் வரவேயில்லை. போதிய மழை இல்லாததால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டதால் மக்கள் பல இடங்களில் குடிநீர் கேட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 2 நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை வேளைகளில் கனமழை பெய்யுமோ என்ற வகையில் கருமேகங்கள் சூழ்ந்ததால் தஞ்சை மக்கள் ஆவலுடன் வானத்தை பார்த்து வந்தனர். ஆனால் ஒருசில துளிகளுடன் மழை ஏமாற்றி சென்றதால் தஞ்சை பகுதி மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் மாலையில் வழக்கம் போல் வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. இன்றும் ஏமாற்றுமோ மழை என்று மக்கள் நினைத்திருந்த நிலையில் மாலை 6 மணி அளவில் காற்றுடன் மழை நாலாபுறமும் சுழன்று அடித்து பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மழையால் கடந்த 8 மாதங்களுக்குப்பின் தஞ்சை நகர வீதிகளில், மழைநீர் பெருக்கெடுத்தது. மண் குளிர்ந்தது. காற்றும் இதமாக சில்லென்று வீசியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்து மகிழ்ச்சியுடன் ரசித்தனர். சிலர் மழையில் உற்சாகத்துடன் நனைந்து மகிழ்ந்தனர்.

இந்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் ஓரளவு உயரும் என்றும், தொடர்ந்து பெய்தால் குடிநீர் தட்டுப்பாடு மாறும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

தஞ்சை மாவட்டம் வல்லத்தில் நேற்று 2-வது நாளாக கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. வறண்டு போய் இருந்த விவசாய நிலங்களில் இந்த மழை ஈரத்தை கொண்டு உழவு செய்யும் முனைப்பில் விவசாயிகள் உள்ளனர். இந்த மழை தஞ்சை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே பெய்துள்ளது. வரும் நாட்களில் அனைத்து பகுதிகளிலும் பெய்து வறட்சியை போக்குவதோடு, குடிநீர் தட்டுப்பாட்டையும் நீக்கும் என்று பொதுமக்கள், விவசாயிகள் ஆவலுடன் உள்ளனர்.

Tags:    

Similar News