செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

நாத்திகவாதி, ஆத்திகவாதி என்ற இரட்டை வேடம் எதற்கு? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

Published On 2019-07-11 03:18 GMT   |   Update On 2019-07-11 03:18 GMT
அத்திவரதரை தரிசிக்க சிறப்பு தரிசன ‘பாஸ்’ கேட்டு தி.மு.க. நிர்வாகிகள் கடிதம் எழுதி இருப்பது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், நாத்திகவாதி, ஆத்திகவாதி என்ற இரட்டை வேடம் எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:

சென்னை சைதாப்பேட்டையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

வீட்டுக்குள் ஆத்திகவாதியாகவும், வெளியில் நாத்திகவாதியாகவும் சிலர் இருக்கிறார்கள். கடவுள் இல்லாமல் ஒரு செயலும் கிடையாது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் தி.மு.க. எம்.பி.க்கள், முக்கிய நிர்வாகிகள் அத்திவரதரை தரிசிக்க சிறப்பு தரிசனம் ‘பாஸ்’ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி இருக்கின்றனர்.

அத்திவரதர் நாத்திகவாதிகளை எல்லாம் ஆத்திகவாதியாக மாற்றி இருக்கிறார். அதுவே மகிழ்ச்சி தான். இந்த விஷயத்தில் இரட்டை வேடம் தேவை இல்லை. அண்ணா ஒன்றே குலம், ஒருவரே தேவன் என்று சொன்னார். அவர் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. அந்தவகையில் கடவுள் இருக்கிறார் என்று சொல்லிவிட்டு போகலாமே, அதில் எதற்கு இரட்டை வேடம்?

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரின் விடுதலை பற்றி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டு, முதல்-அமைச்சர் பதில் அளித்துள்ளார். அமைச்சரவை கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு தெரியப்படுத்திவிட்டோம். கவர்னரை கையெழுத்து போடுங்கள் என்று நிர்ப்பந்திக்க முடியாது.

ஜெயலலிதா அரசு, அவர் இருந்தபோது எடுத்த முடிவின் அடிப்படையிலே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு கவர்னருக்கு தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது.

கவர்னர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது. அதற்கான அழுத்தத்தை அரசும், முதல்-அமைச்சரும் கொடுத்துகொண்டு தான் இருக்கிறார்கள். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மனித கழிவுகளை அகற்றும் எந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணம் இல்லையா? மனம் இல்லையா? என்று தன்னுடைய டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்து இருக்கிறாரே? என்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், மனித கழிவுகளை எந்திரங்களை கொண்டு அகற்றுவதற்கு அரசு முழுவேகத்தோடு ஈடுபட்டு வருகிறது. கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்ற அக்கறை அரசுக்கு இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் எந்திரங்கள் வாங்கப்பட்டு இருக்கிறது. எந்த இடத்தில் அப்படி ஆனது என்று தெளிவுப்படுத்தவேண்டும். ஒரு புள்ளி விவரத்தை வைத்து சொல்லக்கூடாது. நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் கடுமையாக இருக்கும்போது, அரசு மனிதாபிமான அடிப்படையில் கழிவுகளை மனிதன் அகற்றக்கூடாது என்பதில் சரியாக இருக்கிறது’ என்றார்.

Tags:    

Similar News