செய்திகள்
பாபநாசம் அணை

மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை - பாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்வு

Published On 2019-07-10 06:34 GMT   |   Update On 2019-07-10 06:34 GMT
மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 44 அடியாக இருந்த நீர்மட்டம், 1 அடி உயர்ந்து இன்று காலை 45.10 அடியாக உள்ளது.
நெல்லை:

கேரள மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக களக்காடு மலையில் உள்ள கொடுமுடியாறு அணைப்பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

செங்கோட்டையில் உள்ள அடவிநயினார் அணைப்பகுதியில் 6 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு அணையில் 1 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. பாபநாசம் மலைப்பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 664.70 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 304.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 44 அடியாக இருந்த நீர்மட்டம், 1 அடி உயர்ந்து இன்று காலை 45.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 58.14 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 38 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. மணி முத்தாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 50.65 அடியாக உள்ளது. ராமநதியில் நீர்மட்டம் 40.75 அடியாக உயர்ந்துள்ளது. அடவிநயினார் அணையில் 46.50 அடியும், குண்டாறில் 20.37 அடியும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

குற்றால மலைப்பகுதியிலும் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவியில் மிதமான தண்ணீரும், ஐந்தருவியில் குறைவான தண்ணீரும் விழுகிறது.

இதனால் 2 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து வருகிறார்கள். குற்றாலம் படகுதுறைக்கு இன்றும் போதிய தண்ணீர் வராததால், படகு சேவை தொடங்கப்படவில்லை.
Tags:    

Similar News