செய்திகள்
தற்கொலை முயற்சி (கோப்பு படம்)

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

Published On 2019-07-09 16:41 GMT   |   Update On 2019-07-09 16:41 GMT
தர்மபுரி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம், கதிர்நாய்க்கன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவருக்கு மணிமொழி என்ற மகள் உள்ளார்.

மணிமொழிக்கு கடந்த 2017-ம் ஆண்டு அவரது உறவினரான செந்தில்குமார் மகன் செங்கவிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் நடைபெற்ற 2 நாட்களில் செங்கவி குடும்பத்தினர் வரதட்சனை கொடுமை செய்துள்ளனர். மேலும் 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் வாங்கி வர மணிமொழியை அவரது மாமியார் மற்றும் குடும்பத்தினர் கட்டாயபடுத்தியுள்ளனர்.

இதனையடுத்து மணிமொழி தனது பெற்றோரிடம் தெரிவித்து 5 பவுன் தங்க நகையும் ரூ.2 லட்சம் ரூபாய் பணமும் பெற்று தந்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து வரதட்சனை கொடுமை காரணமாக பிரச்சினை வரவே மணிமொழி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பின்னர் தாய் வீட்டில் இருந்து பி.எட் படித்து விட்டு கோவையில் எம்.எஸ்.சி. பட்டப்படிப்பு பயில விண்ணப்பித்துள்ளார். இதனை அறிந்த அவரது கணவர் செங்கவி அவரது குடும்பத்தோடு சென்று மணிமொழி மற்றும் அவரது தாய் இருவரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.

இது குறித்து மணிமொழி கம்பைநல்லூர் போலீசில் செங்கவி குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் அதற்கு போலீசார் துரித நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து நேற்றும் மணிமொழியின் கணவர் செங்கவி மணிமொழி மற்றும் அவரது தாயை மீண்டும் தாக்கியுள்ளனர்.

இதனால் மணிமொழியின் தாய்க்கு ரத்த காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மனமுடைந்த மணிமொழி வி‌ஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதற்கு முன் தமிழக முதலமைச்சர் மற்றும் தர்மபுரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் மூன்று பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். கடிதம் எழுதிய பிறகு வீடியோவில் அவர் வி‌ஷம் அருந்துவதையும் பதிவு செய்துள்ளார்.

மணிமொழி வி‌ஷம் அருந்தியதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் மணிமொழிக்கு தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து மணிமொழியின் தந்தை மணி பேசும்போது, தொடர்ந்து தங்கள் குடும்பத்தை அச்சுறுத்தி வரும் செங்கவியிடம் இருந்து தன் மகளுக்கு விவாகரத்து பெற்றுத் தருமாறும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News