செய்திகள்
முக ஸ்டாலின்

நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்- அரசு மறுப்பு

Published On 2019-07-08 06:51 GMT   |   Update On 2019-07-08 06:51 GMT
நீட் மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற ஸ்டாலின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை.
சென்னை:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட இரண்டு மசோதாக்களையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. இத்தகவலை உயர்நீதிமன்ற விசாரணையின்போது சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. அரசின் இந்த நடவடிக்கையை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது மு.க.ஸ்டாலின் பேசும்போது, மத்திய அரசு நீட் மசோதாக்களை நிராகரித்தது குறித்து கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

‘சட்டப்பேரவையின் ஆணி வேரை அசைத்துப் பார்த்த மத்திய அரசின் செயலை கண்டிக்கவேண்டும். நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும். நீட் தேர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றக் கூறிய மத்திய அரசு, இப்போது அந்த தீர்மானத்தையே நீர்த்துப் போக செய்துள்ளது’ என ஸ்டாலின் பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நீட் மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர முடியாது என்றார்.

மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் வேண்டாம் என்றால், மத்திய அரசை வலியுறுத்தியாவது தீர்மானம் போடுங்கள் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.



பின்னர் பேசிய ஓ.பி.எஸ், நீட் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்றார்.

நீட் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவதில் அரசுக்கு என்ன பிரச்சனை? என துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

நீட் விவகாரத்தில் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News