செய்திகள்
முக ஸ்டாலின்

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு - மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2019-07-06 14:32 GMT   |   Update On 2019-07-06 14:32 GMT
நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க கொண்டு வரப்பட்ட தமிழக அரசின் இரு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு இன்று தெரிவித்தது. மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது

இந்நிலையில், நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவந்து உடனே நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தின் இரு மசோதாக்களையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கிராமப்புற மாணவர் நலனை துச்சமென மதிக்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது.

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவந்து உடனே நிறைவேற்ற வேண்டும். 

நீட் விலக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.

சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாக்களை நிராகரிக்கும் முடிவினை, மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து தமிழக சட்டமன்றத்தின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

நீட் மசோதா நிராகரிக்கப்பட்ட தகவலை முதல்வரோ, சுகாதாரத்துறை அமைச்சரோ சொல்லவில்லை. மசோதாவை நிராகரித்தது கூட்டாட்சி தத்துவத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கேலி புரியும் செயலாகும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News