செய்திகள்
நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

Published On 2019-07-06 10:37 GMT   |   Update On 2019-07-06 10:37 GMT
சூலூர் அருகே உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூலூர்:

சூலூர் சுல்தான்பேட்டை அருகே உயர் மின் கோபுரம் அமைக்க அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் முதல் கரூர் மாவட்டம் புகளுர் வரை 1,853 கிலோ மீட்டர் தூரத்திற்கு 800கிலோ வாட் திறன் கொண்ட உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது.

இந்த உயர்மின் கோபுரங்கள் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் வழியாக அமைக்கப்படுகிறது. இந்த மின் கோபுரங்களால் விளை நிலம் பாதிக்கப்படுவதுடன் பொது மக்களுக்கும் கதிர் வீச்சால் ஆபத்து ஏற்படும். எனவே, தமிழகத்தில் இத்திட்டத்தை அரசு புதை வடம் வழியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்பட 13 மாவட்டங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியம் சந்திராபுரம் வாரப்பட்டி பகுதியில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன், சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், பெரியசாமி, ராஜேந்திரன், கட்சி சார்பற்ற விவசாய சங்க தலைவர் சண்முகம் மற்றும் பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அதிகாரிகள் எந்தவிதமான பதிலும் கூறாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, எந்த ஒரு அனுமதியும் இன்றி 100-க்கும் மேற்பட்ட காவல்துறை உதவியுடன் எங்களை மிரட்டி நிலத்தை அளக்கும் பணி செய்ய வந்துள்ளனர். நாங்கள் பாடுபட்ட நிலத்தை யாருக்கும் தரமுடியாது. எங்களை மிரட்டி அளவீடு பணி செய்யவேண்டுமெனில் எங்களை குடும்பத்துடன் கொன்றுவிட்டு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News