செய்திகள்
மோசடி

மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் பல லட்சம் மோசடி- மதுரை வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2019-07-06 10:36 GMT   |   Update On 2019-07-06 10:36 GMT
கடன் பெற்று தருவதாக மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் பல லட்சம் மோசடி செய்த மதுரை வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் பிலாத்து, சுக்காம்பட்டி, கொம்பேறிப்பட்டி, சித்து வார்பட்டி, கொசவபட்டி, அய்யலூர் ஆகிய கிராமப்புற மக்களை குறி வைத்து மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த செல்வம் என்ற வாலிபர் தான் பிரபல தொண்டு நிறுவனத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.

அதன் பேரில் ஒரு குழுவுக்கு ரூ.13 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை முன் பணம் கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். அவர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களையும் பெற்றுச் சென்றார்.

பணத்தை பெற்றுச் சென்ற செல்வம் கடன் பெற்றுத் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்த பெண்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

செல்வம் பெண்களிடம் பெற்ற தொகைக்கு பதிலாக காசோலைகளை வழங்கியுள்ளார். ஆனால் அதனை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் செல்வத்திடம் பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இதனையடுத்து வடமதுரை போலீசார் செல்வம் மீது வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். அவர் மேலும் சில ஊர்களில் இதே போல மகளிர் சுய உதவிக்குழுவுக்கு கடன் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். எனவே அவரை பிடித்து விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News