செய்திகள்
சிறுமி திருமணம் நிறுத்தம்

புதுவை அருகே 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2019-07-06 09:31 GMT   |   Update On 2019-07-06 09:31 GMT
புதுவை அருகே 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார்சாவடியை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ராமதாஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து சென்று விட்டார். இதனால் கஸ்தூரி கூலிவேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கஸ்தூரியின் 16 வயது மகள் கோட்டக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து தேர்ச்சி அடைந்த நிலையில் பிளஸ்-1 வகுப்புக்கு மாணவியை அனுப்பாமல் அவருக்கு கஸ்தூரி திருமண ஏற்பாடு செய்தார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த தேவனூர் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் ஆதிமூலம் (25) என்பவருக்கும், மாணவிக்கும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேவனூர் கோவிலில் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்தனர். திருமணத்துக்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்த நிலையில் 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க உள்ளதாக விழுப்புரம் மாவட்ட சமூகநல விரிவாக்க அலுவலர் விஜயலட்சுமிக்கு புகார் வந்தது.

இதையடுத்து இதன்மீது விசாரணை நடத்த விழுப்புரம் மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிமற்றும் கோட்டக்குப்பம் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி மற்றும் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சின்னமுதலியார் சாவடிக்கு சென்று மாணவி மற்றும் அவரது தாயார் கஸ்தூரியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தது உறுதியானது. இதையடுத்து அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்றும் மாணவிக்கு 18 வயது நிறைவடைந்த பின்னர் திருமணம் செய்து வைக்குமாறு கஸ்தூரிக்கு அறிவுரை கூறினர். அதனை கஸ்தூரி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாளை மறுநாள் மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

மேலும் அந்த மாணவியை பிளஸ் 1- வகுப்பில் சேர்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உறுதி அளித்தார்.
Tags:    

Similar News