செய்திகள்
பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள்.

சேலம் அருகே பிளஸ்-2 மாணவி கற்பழிப்பு: தலைமறைவான அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு

Published On 2019-07-06 07:11 GMT   |   Update On 2019-07-06 07:11 GMT
சேலம் அருகே பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தலைமறைவாக உள்ள அரசு பள்ளி ஆசிரியரை சஸ்பெண்டு செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
சேலம்:

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ளது வேம்படிதாளம். இங்குள்ள அரசு பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் கடந்தாண்டு நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்தார். அதே பள்ளியில் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ஆசிரியராகவும், உதவி தலைமை ஆசிரியராகவும் உள்ளார்.

மாற்று திறனாளியான இவர் வேதியியல் ஆசிரியர் என்பதால் மாணவிகளை அடிக்கடி ஆய்வகத்திற்கு அழைத்து செல்வார். அப்படி வெப்படை பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியையும் ஆய்வுக்கூடத்திற்கு அழைத்து சென்றார். அப்போது அங்கு வைத்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து அவரை மிரட்டிய அவர் அங்கு வைத்து பல நாட்கள் பலாத்காரம் செய்தார்.

இதை அறிந்த மாணவியின் பெற்றோர் கொண்டலாம்பட்டி போலீசில் 4 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அந்த ஆசிரியரிடம் இருந்து ரூ. 5 லட்சம் பெற்று தருவதாகவும், புகாரை வாபஸ் வாங்குமாறும் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் பெற்றோர் புகாரை வாபஸ் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே பள்ளி மாணவி ஒருவர் வெளியில் தகவலை கூறியதால் உயர் கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பள்ளிக்கு குழந்தைகளை விட வந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஏற்கனவே இந்த பள்ளியில் காதல் விவகாரத்தில் மாணவி ஒருவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை, தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர் வற்புறுத்தினர். இதையடுத்து ஆசிரியர் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே பாலாஜி மீதான புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் புஷ்பராணி நேற்று அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். மேலும் அவரை தேடிய போது கடந்த திங்கட்கிழமை முதல் மருத்துவ விடுப்பு எடுத்து விட்டு அவர் தப்பியோடியது தெரிய வந்தது.

அவரை புஷ்பராணி தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது போல வேறு மாணவிகளையும் பலாத்காரம் செய்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தும் உடனே வழக்கு பதிவு செய்யாமல் வேலியாக இருக்க வேண்டிய ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டு கட்டப்பஞ்சாயத்து பேசிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளளனர்.

இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் பாலாஜி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேசமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News