செய்திகள்
அதிமுக

மாநிலங்களவைத் தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Published On 2019-07-06 06:42 GMT   |   Update On 2019-07-06 06:42 GMT
தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். திமுக தரப்பில் இரண்டு இடங்கள்  திமுகவுக்கும், ஒரு இடம் மதிமுகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.  அதிமுக தரப்பில் இரண்டு இடங்கள் அதிமுகவுக்கும், ஒரு இடம் கூட்டணி கட்சியான பாமகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், திமுக தரப்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த உறுப்பினர் பதவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மூவரும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை கட்சி தலைமை இன்று அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சரும், வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை நலப்பரிவு இணை செயலாளருமான அ.முகமது ஜான், மேட்டூர் நகர அதிமுக செயலாளர் என்.சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதேபோல் வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய 8-ம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News