செய்திகள்
மருத்துவ கலந்தாய்வு (கோப்பு படம்)

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு 8-ந்தேதி தொடங்குகிறது - தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

Published On 2019-07-05 20:11 GMT   |   Update On 2019-07-05 20:11 GMT
மருத்துவ படிப்புகளுக் கான கலந்தாய்வு 8-ந் தேதி (நாளை மறுதினம்) தொடங்குகிறது. அதற்கு முன்னதாக தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
சென்னை:

நீட் தேர்வு முடிவு கடந்த மாதம்(ஜூன்) 5-ந் தேதி வெளியானதும், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், மாணவ- மாணவிகள் தங்களுடைய சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப கடந்த மாதம் 22-ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் தரவரிசை பட்டியல் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் தேர்வான 1,300 பேருக்கு ஏற்கனவே பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது 584 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் வழங்கினார்.

இந்த ஆண்டுக்குள் செவிலியர்கள் 2,342 பேர், லேப் டெக்னீசியன் 1,508 பேர், கிராம சுகாதார அலுவலர்கள் 1,234 பேர், சுகாதார ஆய்வாளர் 1,172 பேர் உள்பட மருத்துவர் அல்லாத பணியிடங்களுக்கு 8 ஆயிரத்து 68 பேர் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். இதுவரை 26 ஆயிரத்து 777 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ படிப்பு இடங்களுக்கு மொத்தம் 68 ஆயிரத்து 20 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். அதை சரிபார்த்து தரவரிசை பட்டியல் தயாராக இருக்கிறது. இந்த பட்டியல் நாளை (இன்று) காலை வெளியிடப்படுகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறப்படுத்துவது குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து பேசி முடிவு செய்யப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் அது நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் தரவரிசை பட்டியல் வெளியானதும், 8-ந் தேதி(நாளை மறுதினம்) சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும், 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது என்றும் மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் செல்வராஜ் தெரிவித்தார்.
Tags:    

Similar News