செய்திகள்
இஞ்சி செடிகளை படத்தில் காணலாம்.

மழையால் விளைச்சல் பாதிப்பு- இஞ்சி விலை வரலாறு காணாத உயர்வு

Published On 2019-07-05 16:56 GMT   |   Update On 2019-07-05 16:56 GMT
மழையால் விளைச்சல் பாதித்த காரணத்தால் இஞ்சி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளது. ஒரு மூட்டை ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கூடலூர்:

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் பருவமழை பெய்ய தொடங்கும். இதை முன்னிட்டு கோடை காலமான மே மாதம் விவசாயிகள் தங்களது நிலத்தை நன்கு உழுது தயார் படுத்துகின்றனர். பின்னர் மழைநீர் தேங்கி நிற்காதவாறு பாத்திகள் அமைத்து விதை இஞ்சியை நடவு செய்கின்றனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் பருவமழை குறிப்பிட்ட காலத்தில் பெய்ய தொடங்கும் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் சாரல் மழை மட்டுமே பரவலாக பெய்து வருகிறது. தொடர் பலத்த மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. மேலும் மண்ணின் ஈரத்தன்மையும் குறைவாக உள்ளது. இருப்பினும் சரியான பருவத்தில் இஞ்சி செடிகள் வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் கேரளா, கர்நாடகா மற்றும் கூடலூர் பகுதியில் அளவுக்கு அதிகமான மழை ஒரே சமயத்தில் பெய்தது. இதனால் வெள்ள சேதம் ஏற்பட்டு விவசாய பயிர்கள், வீடுகள் நீரில் முழ்கின.

இதனால் இஞ்சி விளைச்சல் பாதித்தது. இதேபோல வடமாநிலங்களிலும் வறட்சியால் இஞ்சி விளைச்சல் அடியோடு சரிந்தது. இதனால் நடப்பு ஆண்டில் மார்க்கெட்டுக்கு இஞ்சி வரத்து இல்லை. கடந்த மாதம் 60 கிலோ இஞ்சி ரூ.9 ஆயிரம் வரை விற்கப்பட்டு வந்தது. விளைச்சல் இல்லாததால் நாளுக்குநாள் இஞ்சி விலை உயர்ந்து வருகிறது. நடப்பு மாத தொடக்கத்தில் 1 மூட்டை(60 கிலோ) இஞ்சி வரலாறு காணாத வகையில் ரூ.10 ஆயிரத்து 500 ஆக விலை உயர்ந்துள்ளது. இன்னும் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இஞ்சி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பல ஆண்டுகளுக்கு முன்பு 1 மூட்டை இஞ்சி 1,800 என விலை கிடைத்து வந்தது. நாளடைவில் படிப்படியாக உயர்ந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக பெய்த மழையால் இஞ்சி விளைச்சல் கடுமையாக பாதித்தது. இதனால் நடப்பு ஆண்டில் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது. இதனால் எங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது. 

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News