செய்திகள்
போலீசார் விசாரணை (கோப்பு படம்)

‘டிக்டாக்’ வீடியோ தகராறில் நண்பரை கொன்றவர் கொலை செய்யப்பட்டாரா? - போலீசார் விசாரணை

Published On 2019-07-04 11:57 GMT   |   Update On 2019-07-04 11:57 GMT
திருவள்ளூர் அருகே டிக்டாக் வீடியோ தகராறில் நண்பரை கொன்ற வாலிபர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருத்தணியை அடுத்த தாழவேடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். கடந்த பிப்ரவரி மாதம் இவர் ஜாதிவெறியை தூண்டும் வகையில் பேசிய ‘டிக்டாக்’ வீடியோ சமுல வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ அதே பகுதியை சேர்ந்த நண்பர் விஜய் (18) என்பவர் விளையாட்டாக எடுத்து பரப்பி இருந்தார்.

இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் பிப்ரவரி 22-ந்தேதி விஜய்யை கழுத்தை நெறித்து வெங்கட்ராமன் கொலை செய்தார். பின்னர் அவர் திருத்தணி போலீசில் சரண் அடைந்தார்.

இதையடுத்து ஜெயிலில் அடைக்கப்பட்ட வெங்கட்ராமன் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தினந்தோறும் திருத்தணி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் திருத்தணியை அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் வெங்கட்ராமன் இறந்து கிடந்தார். அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்ததாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் வெங்கட்ராமனின் தந்தை கண்ணப்பன் திருத்தணி போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், எனது மகன் தற்கொலை செய்யவில்லை. ஏற்கனவே வெளியான வீடியோ விவகாரம் தொடர்பாக யாரேனும் அவனை பழிவாங்கும் நோக்கில் கொலை செய்து இருக்கலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

இச்சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News