செய்திகள்
மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: வணிக வரித்துறை டிரைவர் கைது

Published On 2019-07-03 14:23 GMT   |   Update On 2019-07-03 14:23 GMT
அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்த வணிக வரித்துறை டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கரூர்:

கரூர் வருவாய்  கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் வணிக வரித்துறை அலுவலகத்தில் டிரைவராக டிவன்காந்த்(வயது 39) என்பவர் பணியாற்றி வந்தார். கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த இவர் கரூர் வெங்கக்கல்பட்டி திருமாநகரை சேர்ந்த சுந்தர வடிவேல் என்பவரது மனைவிக்கு அரவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டார். இது குறித்து தாந்தோன்றிமலை போலீசில் சுந்தரவடிவேல் புகார் அளித்தார். 

இதே போன்று கரூர் வெங்கமேடு வி.வி.ஜி.நகரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகனுக்கு வணிக வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளார். இது பற்றி விஸ்வநாதன் டவுன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து டிவன்காந்த் மீது 2 போலீஸ் நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் மேலும்  பல பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கைதான டிவன்காந்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்த டிவன்காந்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய முன்னாள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் மற்றும் தற்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டிய ராஜன் ஆகியோர் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது. கலெக்டர் அன்பழகன் கைதான டிவன்காந்தை  குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த டிவன்காந்திடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News