செய்திகள்
வைகோ

கவர்னர் பதவியில் இருந்து கிரண்பேடியை நீக்கவேண்டும்- வைகோ

Published On 2019-07-02 02:51 GMT   |   Update On 2019-07-02 02:51 GMT
தண்ணீர் பிரச்சினையில் தமிழக மக்களை இழிவுபடுத்துகின்ற வகையில் கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடியை கவர்னர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னை :

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தண்ணீர் பிரச்சினையில் தமிழகம் தவித்துக்கொண்டு இருக்கின்ற நிலையில் தமிழக மக்களை இழிவுபடுத்துகின்ற வகையில் புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடி கருத்து தெரிவித்து இருப்பது வரம்பு மீறியதும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதும் ஆகும். தமிழக மக்களை பொறுப்பு அற்றவர்களாக சித்தரிக்க முனைகின்ற கிரண்பேடியின் ஆணவப்போக்குக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு தோல்வி அடைந்த கிரண்பேடி, புதுச்சேரி கவர்னராக பொறுப்பு ஏற்ற நாள் முதல், தாமே ஆட்சியாளர் போலச் செயல்பட்டு வருகின்றார்.

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசு நிர்வாகத்தை முடக்கியதுடன், முதல்-மந்திரியையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் துச்சமாக கருதி செயல்பட்டு வருகின்றார். மாநில அரசு நிர்வாகத்தில் தலையிட அவருக்கு உரிமை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியவுடன் பதவி விலகி இருக்கவேண்டிய கிரண்பேடி, இன்னமும் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது, அவரது பதவிப்பித்தை காட்டுகின்றது.

கடந்த 3 ஆண்டுகளாக புதுச்சேரி அரசை திட்டமிட்டு முடக்கி வருகின்ற, மக்களை மதிக்காத கிரண்பேடி உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையென்றால் ஜனாதிபதி அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News