செய்திகள்
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்று இரவுக்குள் ஊதியம் கிடைக்க ஏற்பாடு - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Published On 2019-07-01 05:17 GMT   |   Update On 2019-07-01 05:17 GMT
அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் இன்று இரவுக்குள் ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 3500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 30 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 800-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மின்சார ரெயில் சேவைக்கு அடுத்த படியாக மாநகர போக்குவரத்து கழகத்தின் சேவை பெரும் பங்காக உள்ளது.

இந்த போக்குவரத்து கழகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 21 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 30-ந்தேதி வங்கி கணக்கு வழியாக சம்பளம் வழங்கப்படும்.

ஜூன் மாதம் சம்பளம் நேற்று (30-ந்தேதி) வழங்கி இருக்க வேண்டும். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வங்கிகள் மூலம் போக்குவரத்து ஊழியர்களின் கணக்கில் சம்பளம் செலுத்த முடியவில்லை. மாதத்தின் இறுதி நாள் விடுமுறை தினமாக அமைந்து விடும் நிலையில் அதற்கு முதல் நாள் ஊதியம் வழங்கப்பட வேண்டும். இது தான் வழக்கமான நடைமுறையாகும்.

வழக்கம் போல் சனிக்கிழமை வங்கி கணக்கில் சம்பளம் வரும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தனர். அன்று வராததால் ஞாயிற்றுக்கிழமை வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் சம்பளம் போடப்படவில்லை. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மட்டும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட நாளில் சம்பளம் வழங்கப்படவில்லை. மற்ற 7 போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு விட்டது.

இதனால் சென்னை மாநகர பஸ் தொழிலாளர்கள் இன்று காலையில் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வடபழனி, கே.கே.நகர், அண்ணாநகர் மேற்கு உள்ளிட்ட 6 பணிமனைகளில் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். டிரைவர், கண்டக்டர்கள் பஸ்களை வெளியே எடுக்காமல் பணிமனை முன்பு கூடி திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால் சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் காலையில் பஸ் போக்குவரத்து இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரையில் ஊழியர்கள் பஸ்களை இயக்க முன் வராததால் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் பணிமனைகளில் நின்றன.

பிராட்வே, கோயம்பேடு, வடபழனி, கே.கே.நகர், அண்ணாநகர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் பஸ் கிடைக்காமல் பயணிகள் அவதிப்பட்டனர். சம்பளத்தை உடனே வழங்கக்கோரி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தகவல் அறிந்து அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

கே.கே.நகர் பணிமனையில் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊழியர்கள் பணிக்கு திரும்பினார்கள். பஸ்கள் புறப்பட்டு சென்றன. ஆனாலும் ஒரு சில டெப்போக்களில் ஊழியர்கள் பஸ்களை எடுக்காமல் பிடிவாதமாக இருந்தனர்.



பஸ் ஊழியர்களின் திடீர் ஸ்டிரைக் காரணமாக காலையில் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லக்கூடியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர பஸ்கள் அதிகளவு செல்வது வழக்கம். இன்று காலையில் குறைந்த அளவில் வந்து சென்றன. பின்னர் படிப்படியாக பஸ் போக்குவரத்து தொடங்கியது.

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் மாதத்தின் இறுதி நாள் வழங்கப்படும். நேற்று விடுமுறை என்பதால் ஒரு சிலரின் வங்கி கணக்குகளில் பணம் செல்லவில்லை. அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் கணக்கில் போடப்பட்டுள்ளது. சிலருக்கு கிடைக்கவில்லை. இன்று இரவுக்குள் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News