செய்திகள்
ஜவாஹிருல்லா

குடிநீர் தட்டுப்பாடை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்- ஜவாஹிருல்லா பேட்டி

Published On 2019-06-30 19:22 GMT   |   Update On 2019-06-30 19:22 GMT
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
நாகர்கோவில்:

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அந்த திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் அமல் படுத்த இருப்பதாக மத்திய மந்திரி பஸ்வான் கூறியுள்ளார்.

இது இந்தியாவின் பன்முக தன்மைக்கு எதிரானது. ஆர்.எஸ்.எஸ்.கொள்கையை நாடு முழுவதும் செயல்படுத்தும் வகையில் இது போன்ற திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதுபோன்ற திட்டங்களை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.

கூடங்குளத்தில் அணு கழிவுகளை புதைக்க முயற்சி நடக்கிறது. அங்கு மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்கும் பணியும் நடக்கிறது.

இது தென் மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பேராபத்தை ஏற்படுத்தும். பொது மக்களின் நலன் கருதி இத்திட்டத்திற்கு தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்.

தமிழ் நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று ஏற்கனவே நிபுணர்கள் கூறியதை கண்டுகொள்ளவில்லை. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் அதனை சமாளிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எதிர்கட்சிகள் தண்ணீர் பிரச்சினைக்காக போராடிய பின்னரே அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தண்ணீர் பிரச்சினைக்கு எந்த தீர்வும் ஏற்பட வில்லை. தமிழகத்தில் தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சினையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். அதற்கான முயற்சியை மாநில அரசு எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளரான ஹைதர் அலி, தலைமைக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டார். இதற்காக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது.

ஹைதர் அலி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News