செய்திகள்
சர்வதேச சமூக வலைத்தளம் தினம்

வன்முறை தவிர்த்து நன்முறை விதைப்போம் - இன்று சர்வதேச சமூக வலைத்தளம் தினம்

Published On 2019-06-30 10:22 GMT   |   Update On 2019-06-30 10:22 GMT
உலகநாடுகள் இன்றைய தேதியை சர்வதேச சமூக வலைத்தளம் தினமாக கொண்டாடி வரும் நிலையில் வதந்திகள் தவிர்த்து நன்முறைகளை மட்டும் மக்களின் மனங்களில் விதைக்க சபதமேற்போம்.
சென்னை:

இந்தியாவை பொருத்தமட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் தினந்தோறும் காலையில் நாளிதழ்கள் வாசித்தல் காலை, பிற்பகல் மற்றும் மாலை, இரவு வேளைகளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் வானொலி மூலம் 10 நிமிடங்களுக்கு செய்திகளை கேட்பது ஆகியவை மட்டுமே மக்களுக்கும் இந்த உலகத்துக்குமான சாளரமாக இருந்து வந்தது.

நாளடைவில் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட பெரும் புரட்சியால் தொலைக்காட்சி, பேஜர், கைபேசி என தகவல் தொழில்நுட்பத்துறையும் அசுர வளர்ச்சி அடைந்து இன்று அந்த நொடியில் நிகழும் சம்பவங்கள் அனைத்துமே நமது விழிகளுக்கும் செவிகளுக்கும் விரைவாக விருந்தாக்கப்படுகின்றன.

தொழில்ரீதியான ஊடகங்கள் தவிர சமூகத்தின் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இன்றைய காலகட்டத்தில் டுவிட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்கள் நம்மிடையே தவிர்க்க முடியாத அங்கமாக ஆகிவிட்டன.

இவற்றின் மூலம் நாட்டின் கடைக்கோடியில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும், சமூக வன்கொடுமைகளும் உடனுக்குடன் முழு உலகத்துக்கும் தோலுரித்துக் காட்டப்படுகின்றன. இதனால் சமூகம்சார்ந்த பொறுப்புணர்வும், விழிப்புணர்வும் தூண்டப்பட்டு அநீதிகளுக்கு எதிராக போராடும் அடிப்படை நோக்கம் நம்முள் விதைக்கப்படுகின்றன.

ஆனால், சில வேளைகளில் பொய்யான தகவல்களும், புனைக்கதைகளும், வதந்திகளும் முல்லைவனத்தில் முளைத்த கள்ளிச்செடிகளாக சமூக வலைத்தளங்களின் உயரிய நோக்கத்தை பாழடித்து விடுவதுண்டு.

இப்படி, ஒரு சமூகத்தினருக்கு ஆதரவாக வெளிவரும் தகவல்கள் அடுத்தவர்களுக்கு எதிர்ப்பாகவும், பிற சமூகத்தை எதிர்த்து தெரிவிக்கப்படும் கருத்துகள் மற்றவர்கள் உயர்த்திப் பிடித்து ஆதரிக்க தேவையான காரணியாகவும் மாறுகின்றன.

நமக்குள் வார்த்தை மோதல்களும் வாக்குவாதங்களும் தலைதூக்கி நமது ஒற்றுமையையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் கேலிக்குரியதாகவும், கேள்விக்குறியாகவும் மாறுவதை இனியாவது தவிர்த்திட நாம் அனைவரும் முன்வர வேண்டும்.



அவ்வகையில், வதந்திகளால் உருவாகும் வெறுப்புணர்வு சார்ந்த வன்முறைகளை தவிர்த்து பொறுப்புணர்வுடன் நன்முறைகளை மட்டுமே இனி விதைக்க வேண்டும் என  சர்வதேச சமூக வலைத்தளம் தினமான (ஜூன் 30) இன்று நாம் அனைவரும் உறுதியேற்போம்.

Tags:    

Similar News