செய்திகள்

சென்னையில் கருணாநிதி சிலையை மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்

Published On 2019-06-27 08:45 GMT   |   Update On 2019-06-27 08:45 GMT
சென்னையில் ஆகஸ்டு 7-ந்தேதி கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி திறந்து வைக்க உள்ளார்.
சென்னை:

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகிற ஆகஸ்டு 7-ந்தேதி அனுசரிக்கப்பட உள்ளது.

இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை வைக்கப்பட உள்ளது. இந்த சிலை மீஞ்சூரில் தயாராகி வருகிறது.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிலை வடிவமைக்கும் பணியை பார்வையிட்டு வந்துள்ளார்.

ஆகஸ்டு 7-ந்தேதி கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த சிலையை மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி திறந்து வைக்க உள்ளார். விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். இதற்கான அழைப்பிதழை அவரிடம் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி கருணாநிதியின் முழு உருவ சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் பங்கேற்றார்.

Tags:    

Similar News