செய்திகள்

கவர்னர் கிரண்பேடிக்கு மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவார்கள்- கந்தசாமி ஆவேசம்

Published On 2019-06-26 15:15 GMT   |   Update On 2019-06-26 15:15 GMT
அமைச்சர்கள் முறைகேடு செய்ததாக புகார் கூறிய கவர்னர் கிரண்பேடிக்கு மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவார்கள் என்று கந்தசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.
புதுச்சேரி:

அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி ஆகியோர் விதி முறைகளை மீறி தங்கள் அலுவலகத்துக்காக அரசு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்று செலவு செய்ததாக புகார் கூறப்பட்டது. 

இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை நடத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். இது சம்பந்தமாக அமைச்சர் கந்தசாமியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

என்னிடம் உள்ளதுறைகளை பொறுத்தவரை இவை பொதுமக்களுடன் நேரடி தொடர்புள்ள துறைகள் ஆகும். குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட இலாகாக்கள் என்னிடம் உள்ளன. அந்த வகையில் என்னை பார்ப்பதற்காக மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் அதிகமாக வருவார்கள். 

அவர்களுக்கு ஒரு டீ வாங்கி கொடுப்பது தவறா? அமைச்சர் அலுவலகத்தில் கடந்த கால நடைமுறைகள் எப்படி இருந்ததோ அதையே அலுவலக ஊழியர்கள் பின்பற்றி இருப்பார்கள். யாருக்கு டீ கொடுக்கிறார்கள்? பிஸ்கெட் வாங்கி கொடுக்கிறார்கள்? எங்கிருந்து வாங்கி கொடுக்கிறார்கள் என்பதை கவனிப்பதா அமைச்சருடைய வேலை?

மாதம் 5 ஆயிரம் ரூபாய்க்கு டீ, பிஸ்கெட் வாங்கி கொடுத்து இருக்கிறார்கள். இது, ஒரு பெரிய செலவு அல்ல. ஏற்கனவே கவர்னர், அமைச்சர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறார். இப்போது சின்ன விஷயத்திலும் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறார். 

இதற்கு முன்பு கவர்னர் செய்த தவறுக்காக பாராளுமன்ற தேர்தலில் புதுவை மக்கள் பாடம் புகட்டினார்கள். இனி, சட்டசபை தேர்தலிலும் புதுவை மக்கள் கவர்னருக்கு பாடம் புகட்டுவார்கள். 

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.
Tags:    

Similar News