செய்திகள்

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2019-06-26 13:50 GMT   |   Update On 2019-06-26 13:50 GMT
சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, ஜங்சன், செவ்வாய்ப்பேட்டை, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக இந்த மழை பெய்தது.

இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, ஏற்காடு, எடப்பாடி, சங்ககிரி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழையை தொடர்ந்து வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் கடந்த சில நாட்களாக புழுக்கத்தில் தவித்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவியது.

சேலம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

மாவட்டத்தில் சேலம் மாநகரில் அதிக பட்சமாக 28.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆனைமடுவு 20, ஏற்காடு 8.2, எடப்பாடி 5, சங்ககிரி 5.2 என மாவட்டம் முழுவதும் 66.8 மி.மீ. மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News