செய்திகள்

கும்பகோணம் பெண் கொலை வழக்கில் மின்வாரிய ஊழியர் கைது

Published On 2019-06-26 13:16 GMT   |   Update On 2019-06-26 13:16 GMT
கும்பகோணம் அருகே பணத்துக்காக பெண்ணை அடித்து கொலை செய்த வழக்கில் மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 12 பவுன் நகையை மீட்டனர்.
கும்பகோணம்:

கும்பகோணம் அருகே உள்ள மேலகொற்கை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 49). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (36). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் சந்தோஷ் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். மகள், தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். மேல கொற்கையில் உள்ள வீட்டில் வசந்தி மட்டும் தனியாக வசித்து வந்தார். 

கடந்த 18-ந் தேதி வீட்டில் வசந்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பட்டீஸ்வரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் கொலை நடந்த பிறகு அதே கிராமத்தை சேர்ந்த மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்த வசந்தியின் சித்தப்பா மகன் பாலமுருகன் (35) தலைமறைவானது தெரிய வந்தது. 

இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் வசந்திக்கும், பாலமுருகனுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை இருந்ததாக தெரிவித்தனர். இதனால் பாலமுருகன் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தஞ்சை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தேடி வந்தனர். 

இந்த நிலையில் ஒரு இடத்தில் பதுங்கியிருந்த பாலமுருகனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அதில் பணத்துக்காக வசந்தியை பாலமுருகன் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து பாலமுருகனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 12 பவுன் நகைகளை மீட்டனர். தொடர்ந்து அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய விவரம் தெரிய வரும்.
Tags:    

Similar News