செய்திகள்

கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டம் - எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2019-06-26 08:34 GMT   |   Update On 2019-06-26 11:00 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நெம்மேலி சென்று கடல்நீரை குடிநீராக்கும் 3-வது திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை:

சென்னையின் குடிநீர் தேவைக்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தினமும் 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 10 ஆண்டுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் வட சென்னை பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியிலும் 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இங்கிருந்து தென்சென்னை பகுதியான திருவான்மியூர், வேளச்சேரி, சோழிங்க நல்லூர் பகுதிகளுக்கு தினமும் 80 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த 2 திட்டத்துக்கும் ரூ.1140 கோடி வரை செலவானது.

இப்போது சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் மேலும் ஒரு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வர முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நெம்மேலியில் கூடுதலாக 150 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.1,250 கோடியில் செயல்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு ஜெர்மன் நாட்டு கே.எப்.டபிள்யூ நிறுவனம் நிதி உதவி செய்ய முன் வந்துள்ளது. திட்டப் பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளதால், விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழன்)நெம்மேலி சென்று கடல்நீரை குடிநீராக்கும் 3-வது திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். தலைமை செயலாளர் கிரிஜாவைத்தியநாதன், குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினமும் 800 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் வகையில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் அடுத்தடுத்து கொண்டு வர முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்னர்.

Tags:    

Similar News