செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் ஆசிரியரை மாற்ற மாணவர்கள் எதிர்ப்பு- வகுப்பை புறக்கணித்து போராட்டம்

Published On 2019-06-25 11:59 GMT   |   Update On 2019-06-25 11:59 GMT
கும்மிடிப்பூண்டியில் ஆசிரியரை இடமாற்றம் செய்ததை கண்டித்து இன்று காலை மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள நத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 83 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

ஆங்கில ஆசிரியராக பாபு என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த 6-ந்தேதி பாபுவை புது கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டு பணியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் ஆசிரியர் பாபுவை இடமாற்றம் செய்ததற்கு மாணவ- மாணவிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரை மீண்டும் அதே பள்ளியில் பணி அமர்த்த கோரி இன்று காலை மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் பள்ளி முன்பு மனித சங்கிலியாக நின்று ஆசிரியரை மீண்டும் நியமிக்க கோரி கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மாணவர்கள் கூறும்போது, “ஆசிரியர் பாபு 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு ஆங்கில பாடம் நடத்தி வந்தார். அவர் எளிதில் புரியும்படி நடத்துவார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டாம். மீண்டும் எங்களது பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும்” என்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிப்பட்டு அருகே ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் அந்த ஆசிரியரை தடுத்து நிறுத்தி பாசப்போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News