செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள்.

ஏரியூர் அருகே வனப்பகுதியில் 11 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

Published On 2019-06-25 06:11 GMT   |   Update On 2019-06-25 06:11 GMT
ஏரியூர் அருகே வனப்பகுதியில் 11 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் துப்பாக்கிகளை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியூர்:

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு அடுத்தடுத்து வந்த தகவலின் பேரில் தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இல்லையெனில் போலீசார் கைப்பற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஏர்கோல்பட்டி, மாதையன் குட்டை வனப்பகுதியில் அதிக நாட்டுத் துப்பாக்கிகள் இருப்பதாக ஆடு, மாடு மேய்ப்பவர்கள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் நேரில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் 7 நாட்டுத் துப்பாக்கிகள் இருந்தது, அவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் வெங்கனூர் மாரியம்மன் கோவில் அருகே 4 துப்பாக்கிகள் கிடந்தது. அதனையும் போலீசார் கைப்பற்றினர். நாட்டு துப்பாக்கிகளை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த வாரம் சந்தைப்பேட்டை வனப்பகுதியில் 5 நாட்டுத் துப்பாக்கிகளை வீசி சென்றிருந்தனர். அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஏரியூர் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் 12 நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. வனப்பகுதியை சுற்றியுள்ள நபர்களிடம் மேலும் நாட்டுத் துப்பாக்கிகள் இருக்கக்கூடும் என்று போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகளை வீசிசென்ற சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags:    

Similar News