செய்திகள்
முன்னாள் ராணுவ வீரர் தங்கவேல் மாணவ-மாணவிகளுக்கு உடற்பயிற்சி கற்றுக்கொடுத்த போது எடுத்த படம்.

ஆசிரியர்கள் இல்லாததால் அரசு பள்ளியில் பாடம் நடத்தும் கிராம பெண்கள்

Published On 2019-06-25 05:23 GMT   |   Update On 2019-06-25 05:23 GMT
விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கிராம அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால் அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் சம்பளம் ஏதுமின்றி மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு:

விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே புத்திராம்பட்டு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.

இங்கு தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் என 2 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். கடந்த 3-ந்தேதி தலைமை ஆசிரியர் விருப்ப ஓய்வு பெற்றார். எனவே இடைநிலை ஆசிரியர் மட்டும் பாடம் நடத்தி வந்தார்.

ஆசியர்கள் இல்லாததால் பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்தனர். ஏற்கனவே மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், மேலும் குறைந்தால் அரசு, இப்பள்ளியை மூடிவிடும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் கருதினர்.

இதனால் பள்ளியை தொடர்ந்து இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ஒவ்வொரு வீடாக சென்று மாணவர் சேர்க்கை குறித்து வலியுறுத்தினர். இதன் பயனாக 17 மாணவர்கள் மட்டும் இருந்த இப்பள்ளியில் தற்போது 32 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இக்கிராமத்தை சேர்ந்த படித்த பெண்கள் 4 பேர் சம்பளம் ஏதுமின்றி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். இவர்கள் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை மாற்றி, மாற்றி வகுப்புகள் எடுத்து வருகின்றனர்.

இக்கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தங்கவேலன், மாணவர்களுக்கு தினமும் உடற்பயிற்சி கற்றுக் கொடுத்து, உடற்கல்வி ஆசிரியராகவே மாறிவிட்டார். மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களையும் கிராம பெரியவர்கள் வழங்கி வருகின்றனர்.

பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News