செய்திகள்

மாநகராட்சி குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிப்பு

Published On 2019-06-25 05:12 GMT   |   Update On 2019-06-25 05:12 GMT
மதுரையில் முதல் முறையாக மாநகராட்சி குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி தண்ணீர் விநியோக முறைகேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதில் 76 வார்டுகளில் குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. மீதம் உள்ள 24 வார்டுகள் மற்றும் மேட்டுப்பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

மதுரை நகர குடிநீருக்காக வைகை அணையில் இருந்து தினமும் 30 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு அணைப்பட்டியில் சுத்திகரிக்கப்பட்டு மதுரைக்கு குழாய்களில் கொண்டு வரப்படுகிறது.

மதுரை அரசரடி நீரேற்று நிலையத்தில் இருந்து 36 லாரிகள் மற்றும் 25 டிராக்டர்கள் மூலம் மதுரை நகர் முழுவதும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வாகனமும் தினமும் 10 முறை மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்கிறது.

தண்ணீர் விநியோகம் தொடர்பாக அடிக்கடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. லாரிகளில் எடுத்து வரப்படும் குடிநீர் தனியாருக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், பல்வேறு பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இந்த நிலையில் மதுரை நகரில் தண்ணீர் வினியோகத்தை முறைப்படுத்த குடிநீர் கொண்டு செல்லும் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. மதுரையில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது.


கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனத்தின் சார்பில் இந்த ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக மாதம் ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்த கருவிகள் மூலம் குடிநீர் வாகனங்கள் செல்லும் பாதை மற்றும் பயன்பெறும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கணினி உதவியுடன் கண்காணிக்க முடியும்.

இதற்காக மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் உத்தரவின்பேரில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குடிநீர் விநியோகத்தை கண்காணித்து வருகிறார்கள். மேலும் குடிநீர் தேவைப்படும் பகுதிகள் குறித்து ஆன்லைன் மூலம் லாரி மற்றும் டிராக்டர்களுக்கு தகவல் அனுப்பப்படுகிறது.

இதனால் அனைத்து பகுதிகளிலும் குறையின்றி தண்ணீர் விநியோகம் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரையை பொருத்த வரை தினமும் 170 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் வைகை அணையின் மூலம் 115 மில்லியன் லிட்டர், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 11 மில்லியன் லிட்டரும் பெறப்படுகிறது. 44 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு மூலம் எடுக்கப்படுகிறது.

மதுரை நகரில் குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் 4 பேர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். குடிநீர் குழாய்களில் ஏற்படும் நீர் கசிவு கவனிக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் அழுத்தம் குறைவான பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் புதிய பைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

வைகை அணையில் தற்போது 31.59 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் மதுரைக்கு வருகிற ஆகஸ்டு மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. மேலும் தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் மதுரைக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்றும் மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் தெரிவித்தார்.

Tags:    

Similar News