செய்திகள்
கோப்புப்படம்

என்னை பிடிக்காவிட்டால் கட்சியில் இருந்து நீக்குங்கள்- தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்

Published On 2019-06-25 04:45 GMT   |   Update On 2019-06-25 04:45 GMT
என்னை பிடிக்காவிட்டால் கட்சியில் இருந்து நீக்கவேண்டியதுதானே என்று அ.ம.மு.க. தலைமைக்கு தங்க தமிழ்ச்செல்வன் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆண்டிப்பட்டி:

அ.தி.மு.க. 2 ஆக பிளவுபட்ட பின் தினகரனும் சசிகலாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு முதல் ஆதரவு தெரிவித்து வந்தவர்களில் தங்க தமிழ்ச்செல்வன் தினகரனின் மிகுந்த நம்பிக்கை பெற்றவராக திகழ்ந்தார். அவருக்கு அ.ம.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும் கொள்கை பரப்பு செயலாளராகவும் செயல்பட்டார். அதனை தொடர்ந்து தென்மாவட்டம் முழுவதும் பல கூட்டங்களை நடத்தி கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்தார்.

பின்னர் தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத்குமாரை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

தமிழகம் முழுவதும் அ.ம.மு.க.விற்கு தீவிர பிரசாரம் செய்த டி.டி.வி.தினகரன் தங்களுக்கு செல்வாக்கு மிகுந்த தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் இந்த தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் இரு துருவங்களாக செயல்பட்டு தேர்தலை சந்தித்தனர்.

தங்கள் இருவருக்கும் தேர்தல் முடிவு எதிர் காலத்தை நிர்ணயிக்கும் என்பதால் களத்தில் தீவிரமாக பணியாற்றினர். இந்த சூழ்நிலையில் 2-வது இடம்கூட தங்க தமிழ்ச்செல்வனுக்கு கிடைக்கவில்லை. வேறு மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரான இளங்கோவன் 2-ம் இடத்திற்கு வந்தார்.

தேனி பாராளுமன்ற தொகுதியில் தனக்கு ஏற்பட்ட தோல்வி மற்றும் தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆண்டிப்பட்டி தொகுதியிலும் தோல்வி என்று அதிர்ச்சி அடைந்த தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் தெரிவிக்கையில், தேர்தலுக்கு பிறகு கட்சியில் எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து நான் கருத்து தெரிவித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியை பற்றி பேசியது உண்மைதான். என்னை பிடிக்காவிட்டால் கட்சியில் இருந்து நீக்கவேண்டியதுதானே. என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? நான் நல்லவன். இதற்கு மேல் என்னைப்பற்றி சிறுபிள்ளைத்தனமான கருத்துகளை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு சில நாட்கள் மவுனமாக இருந்தார்.

அதன்பிறகு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தேனியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசினார். அப்போது தேர்தலில் தனது வெற்றிக்கு பலர் சரியாக உழைக்கவில்லை என்றும், அவர்கள் யார்? யார்? என்று எனக்கு தெரியும். அவர்களின் பெயர்களை டி.டி.வி. தினகரனுக்கு அனுப்ப உள்ளேன். அவர்கள் மீது கட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நான் கட்சியில் இருந்து விலகி விடுவேன் என்று பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அவரது இந்த பேச்சு தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க.வுக்கு செல்ல தயாராகி விட்டதாகவே அமைந்துள்ளது என நிர்வாகிகள் முணுமுணுக்க தொடங்கினர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்க தமிழ்ச்செல்வன் தெரிவிக்கையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் என்று குறிப்பிட்டார்.


இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. எனவே தங்க தமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றார். இது அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இலைமறைகாயாக தினகரனுக்கும், தங்கதமிழ்செல்வனுக்கும் இருந்த மோதல் தற்போது பயங்கரமாக வெடித்துள்ளது.
Tags:    

Similar News