செய்திகள்

டிடிவி தினகரனுடன், தங்கதமிழ்செல்வன் மோதல்

Published On 2019-06-25 02:26 GMT   |   Update On 2019-06-25 04:42 GMT
டி.டி.வி.தினகரன், தங்கதமிழ்செல்வன் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், டி.டி.வி.தினகரனை எச்சரிக்கும் விதமாக தங்கதமிழ்செல்வன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி :

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும், 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். முக்கிய நிர்வாகிகள் கூட டெபாசிட் வாங்கவில்லை. இதனால் அ.ம.மு.க. நிர்வாகிகள் பலரும் டி.டி.வி.தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

நிர்வாகிகள் பலர் அ.தி.மு.க.வில் இணைந்த நிலையில், அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளரும், தேனி மாவட்ட செயலாளருமான தங்கதமிழ்செல்வனும் அ.தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பேட்டியின் போது, ‘தங்கதமிழ்செல்வன் அ.தி.மு.க.வுக்கு வந்தால் வரவேற்போம்’ என்று தெரிவித்து இருந்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூவும் ஒரு பேட்டியில், ‘தங்கதமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் இணைந்தால் தாயுள்ளத்தோடு ஏற்போம்’ என்று தெரிவித்து இருந்தார்.

தங்கதமிழ்செல்வனை அ.தி.மு.க.வில் இணைக்க அமைச்சர்கள் பச்சைக் கொடி காட்டி வந்த நிலையில், அ.ம.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை தலைதூக்கி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வுக்கும், தங்கதமிழ்செல்வனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தங்கதமிழ்செல்வன் தோல்வி அடைந்ததோடு, டெபாசிட் தொகையையும் இழந்தார். வெற்றி பெறாவிட்டாலும் கணிசமான வாக்குகள் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே வாக்குகள் வாங்கினார். இது தொடர்பாக தங்கதமிழ்செல்வன் சில நாட்களுக்கு முன்பு தேனியில் அளித்த ஒரு பேட்டியில், ‘எனது கட்சிக்காரர்கள், சாதிக்காரர்கள் கூட எனக்கு வாக்களிக்கவில்லை’ என்று விரக்தியுடன் தெரிவித்து இருந்தார்.



அ.தி.மு.க.வில் இருந்து தங்கதமிழ்செல்வனிடம் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்ட போதிலும், தங்கதமிழ்செல்வன் அதை மறுத்து வந்தார். இந்நிலையில், தற்போது டி.டி.வி.தினகரனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், தங்கதமிழ்செல்வன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படும் ஒரு ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில், ‘அண்ணன் எங்கே இருக்கிறார். இந்த மாதிரி அரசியல் செய்வதை உங்கள் அண்ணனை நிப்பாட்டச் சொல்லுப்பா. நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் அழிந்து போய்விடுவீர்கள். நான் விஸ்வரூபம் எடுத்தால் நீ உள்பட அழிந்து போய்விடுவீர்கள். நான் நல்லவன். தேனி மாவட்டத்தில் கூட்டம் போடுகிறீர்கள். நாளைக்கு நான் மதுரையில் கூட்டம் போடுகிறேன், நீ பார். என்ன நடக்கிறது என்று நீ பார். உங்க டி.டி.வி.தினகரனிடம் சொல்லு. இந்த மாதிரி அரசியல் செய்தால் தோற்றுப் போய்விடுவாய். என்றைக்கும் ஜெயிக்க மாட்டாய்’ இவ்வாறு தங்கதமிழ்செல்வன் பேசுவதாக உள்ளது. அதில் ஒரு சில ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.

ரகசிய கூட்டம்

இதுகுறித்து தேனி மாவட்ட அ.ம.மு.க. வட்டாரத்தில் கேட்டபோது, ‘அ.ம.மு.க. நிர்வாகிகளான உசிலம்பட்டி மகேந்திரன், மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட டேவிட் அண்ணாதுரை ஆகியோர் நேற்று முன்தினம் தேனிக்கு வந்துள்ளனர். தங்கதமிழ்செல்வனுக்கு தெரியாமல் நிர்வாகிகள் சிலரை சந்தித்து தேனி தொகுதியில் அ.ம.மு.க. தோல்விக்கான காரணம் குறித்து விவரங்கள் கேட்டுள்ளனர். இதற்காக அவர்கள் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். இதை அறிந்ததால் தங்கதமிழ்செல்வன் கோபத்தில் இப்படி பேசி இருக்கலாம்’ என்றனர்.

இந்த தொலைபேசி உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News