செய்திகள்

பாபநாசத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

Published On 2019-06-24 10:09 GMT   |   Update On 2019-06-24 10:09 GMT
பாபநாசத்தில் இன்று காலை குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாபநாசம்:

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. போதிய மழை இன்மையால் நிலத்தடி நீர் மட்டமும் கடும் சரிவை சந்தித்தால் தமிழகம் முழுவதும் குடிப்பதற்கும், கால்நடைகளின் தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதனால் ஆங்காங்கே மக்கள் தண்ணீர் கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி காப்பன் தெருவில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைத்து மின்மோட்டார் மூலம் நீர் ஏற்றி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, குறைந்தழுத்த மின்சாரம் காரணமாக அடிக்கடி காப்பன் தெரு மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் மின் மோட்டாரை இயக்கி குடிநீர் ஏற்றமுடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி அடிக்கடி பேரூராட்சி நிர்வாகத்திடமும் முறையிட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இதேபோல் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இன்று காலையும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அப்பகுதி பெண்கள் ஆத்திரமடைந்து காலிக்குடங்களுடன் பாபநாசம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கண்டறிந்து உடனடியாக தீர்வு கண்டு தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தனர். இதனை ஏற்று அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் அரைமணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். பின்னர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

Tags:    

Similar News