செய்திகள்

வயநாட்டில் 3 மாணவிகளுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு - நீலகிரியில் உஷார் நடவடிக்கை

Published On 2019-06-24 10:03 GMT   |   Update On 2019-06-24 10:03 GMT
வயநாட்டில் 3 மாணவிகளுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து நீலகிரியில் அதிகாரிகள் விழிப்புணர்வு மற்றும் உஷார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டி:

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பாட்டவயல் சோதனை சாவடி அருகே அமைந்துள்ளது கல்லூர் கிராமம். இக்கிராமம் நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ளது.

இங்குள்ள ராஜிவ் நினைவு உறைவிட பள்ளி மாணவிகள் 18 பேருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது 3 மாணவிகளுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

அவர்கள் சுல்தான் பத்தேரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் வயநாடு கலெக்டர் அஜய்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து உணவு மற்றும் குடிநீர் மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வயநாடு மாவட்ட சுகாதார அதிகாரி ரேணுகா கூறும் போது, பன்றி காய்ச்சல் வைரசை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

கேரளாவில் பன்றி காய்ச்சல் பரவி வருவது தமிழக எல்லைக்குட்பட்ட பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது.நீலகிரி மாவட்டம் கேரள எல்லையில் அமைந்து உள்ளதால் இங்குள்ள அதிகாரிகளும் விழிப்புணர்வு மற்றும் உஷார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News