செய்திகள்
பெண்ணிடம் கொள்ளையர்கள் செயினை பறிப்பதையும், அவர் தவறி கீழே விழுவதையும் காணலாம்

செயின் பறிப்பு கொள்ளையர்களிடம் சிக்கிய பெண் தவறி விழுந்து படுகாயம்

Published On 2019-06-24 09:04 GMT   |   Update On 2019-06-24 09:04 GMT
கோட்டூர்புரத்தில் செயின் பறிப்பு கொள்ளையர்களிடம் சிக்கிய பெண் தவறி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை கோட்டூர்புரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவர் அப்பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் 2 பேர் செல்வி அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தனர். அப்போது அவர் தவறி கீழே விழுந்தார். இதில் செல்வியின் உடலில் காயம் ஏற்பட்டது.

ஆள் நடமாட்டம் இருந்த பரபரப்பான நேரத்தில் பயமின்றி கொள்ளையர்கள் பெண்ணை கீழே தள்ளி விட்டுவிட்டு செயினை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

செயின் பறித்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சுதாரிப்பதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.


பெண்ணிடம் செயினை பறித்த கொள்ளையர்கள்

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோட்டூர்புரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண்ணிடம் கொள்ளையர்கள் செயினை பறித்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை போலீசார் போட்டு பார்த்தனர். அப்போது கொள்ளையர்கள் செயினை பறிக்கும்போது செல்வி தவறி கீழே விழும் காட்சிகள் பதைபதைக்க வைக்கும் வகையில் இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் பொதுமக்கள் ஆவேசமாக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீலாங்கரை பகுதியில் பெண்ணிடம் கொள்ளையன் செயின் பறித்த சம்பவம் தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தனர். அதன் பிறகு செயின் பறிப்பு கொள்ளையர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். ஆனால் மீண்டும் மீண்டும் சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்வது வாடிக்கையாகி கொண்டே உள்ளது. அந்த வகையில்தான் நேற்று ஒரே நாளில் 4 பெண்களிடம் செயின் பறிப்பு நடந்துள்ளது.

கோட்டூர்புரத்தில் நடந்த செயின் பறிப்பில்தான் செல்வி கொள்ளையர்களின் பிடியில் சிக்கி தவறி கீழே விழுந்துள்ளார்.

எனவே பெண்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் செயின் பறிப்பு சம்பவங்களில் துணிச்சலுடன் ஈடுபடும் கொள்ளையர்களை கட்டுப்படுத்த மீண்டும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

மயிலாப்பூரில் சாந்தா என்ற பெண்ணிடம் 1 பவுன் நகையும், திருவல்லிக்கேணியில் சுதாதேவி என்பவரிடம் 5 பவுன் நகையும் பறிக்கப்பட்டது. ராயப்பேட்டை பகுதியிலும் பெண் ஒருவரிடம் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். ஒரே நாளில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் கைவரிசை காட்டியது ஒரே நபர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1½ பவுன் செயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் வேலூரைச் சேர்ந்த விஜயபாஸ்கர், கொளத்தூரைச் சேர்ந்த சூர்யா என்பதும் தெரிய வந்தது.

இருவரும் இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களை திருடி அதன் மூலம் செயின் பறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

திருடிய மோட்டார் சைக்கிளை வேறு இடத்தில் விட்டு விட்டு தப்பி செல்வதையும் வழக்கமாக வைத்திருந்தனர். இருவர் மீதும் ஏற்கனவே திருமுல்லைவாயில், கொளத்தூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி, கொள்ளை வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News