செய்திகள்

புதுவையில் திடீர் மழை - வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2019-06-24 08:03 GMT   |   Update On 2019-06-24 08:03 GMT
புதுவையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில் இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கத்திரி வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாமல் கத்திரி வெயிலை விட வெப்பம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் புதுவையில் 104 டிகிரி வெயில் கொழுத்தியது. இதனால் பகல் வேளைகளில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே தயங்குகின்றனர்.

நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இருந்த நிலையில் இரவு 8 மணியளவில் திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 20 நிமிடம் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகர பகுதிகளின் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இந்த திடீர் மழையினால் புதுவையில் சண்டே மார்க்கெட் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. ஆங்காங்கே மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவியாய் தவித்தனர்.

அதேவேளையில் பல நாட்களாக கடும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்த நேரத்தில் நேற்று இரவு பெய்த திடீர் மழையால் புதுவையில் ஓரளவு வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News