செய்திகள்

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 19 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி: முதலமைச்சர் உத்தரவு

Published On 2019-06-23 06:27 GMT   |   Update On 2019-06-23 06:27 GMT
பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 19 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை பதினெட்டாங் குடி, அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த ஜெயபால் ராமநாதபுரம் மதுரை நான்கு வழிச்சாலையில், மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

திருவாடானை வட்டம், நம்புதாளை கிராமம், கிழக்கு கடற்கரை சாலையில் ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் வாகனமும், சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும் மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டம், மணக்குடியைச் சேர்ந்த சுரேஷ், தொண்டியைச் சேர்ந்த செய்யது இப்ராகிம் மற்றும் அப்துல் கலாம் ஆசாத் ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தேன்கனிக்கோட்டை வட்டம், நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் மற்றும் வட்டம், சைதாப்பேட்டையைச் சேர்ந்த முத்து (எ) சுப்பிரமணி என்பவர் சாலையை கடக்க முற்பட்ட போது, ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

புவனகிரி வட்டம், சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவரின் மகன்கள் செல்வன் பரணிதரன், செல்வன் தரணிதரன் மற்றும் செல்வன் பூவரசன் ஆகிய மூன்று சிறுவர்கள் ஏரியில் குளிக்கச் சென்ற போது, தவறி விழுந்து உயிரிழந்தனர்.

ஆம்பூர் வட்டம், பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், அல்லியந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அன்பரசு ஆகிய இருவரும் கோவில் தேர் ஊர்வலத்தின் போது, விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், முனியன்குடிசை கிராமத்தைச் சேர்ந்த செல்வன் வெற்றிவேல் மணல் திட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, பள்ளத்தில் மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கீரைக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா வீட்டின் கழிவு நீர் தொட்டி அடைப்பை சரிசெய்ய முயன்ற போது எதிர்பாராதவிதமாக வி‌ஷ வாயு தாக்கி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இணயம்புத்தன்துறை கிராமத்தைச் சேர்ந்த ராஜ் பைபர் படகில் கடலில் மீன் பிடிக்கச் சென்றவர், சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கிள்ளியூர் வட்டம், இணயம்புத்தன்துறை கிராமத்தைச் சேர்ந்த நெல்சன் என்பவர் கட்டுமரத்தில் கடலில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறி விழுந்து உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் ரெகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த யாகுலமேரி பழவேற்காடு ஏரியில் படகு சவாரியின் போது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பல்லாவரம் வட்டம், சிக்கராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோக் கிணற்றை தூர் வாருவதற்கு கயிறு கட்டி கிணற்றில் இறங்கும் போது, மயக்கமடைந்து தண்ணீரில் விழுந்து உயிரிழந்தார் என்ற செய்திகளை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News