செய்திகள்

ஊட்டியில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி - கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு

Published On 2019-06-22 16:53 GMT   |   Update On 2019-06-22 16:53 GMT
ஊட்டியில் உலக யோகா தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
ஊட்டி:

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந் தேதி உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு யோகா பயிற்சி ஊட்டி அண்ணா உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா மற்றும் அதிகாரிகள் தரையில் அமர்ந்து யோகாசனங்களை செய்தனர். ஊட்டி மனவளக்கலை மன்றத்தினர் யோகாசனங்களை செய்து காட்ட அதிகாரிகள், போலீசார் பல்வேறு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தேசிய மாணவர் படை(என்.சி.சி.) மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி வகுப்பு விளையாட்டு மைதானத்தில் நடந்தது. என்.சி.சி. அலுவலர் உமாசங்கர் யோகாசனங்களை செய்து காண்பிக்க, அதனை மாணவ-மாணவிகள் செய்தனர். யோகா பயிற்சி மேற்கொள்வதால் மனஅழுத்தம் குறைவது, ஞாபகதிறன் அதிகரிப்பது உள்ளிட்ட பயன்கள் குறித்து என்.சி.சி. அலுவலர் விஜய் விளக்கி கூறினார். இதில் என்.சி.சி. மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அரசு உதவி பெறும் ஊட்டி சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் உலக யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர். நீலகிரி மாவட்ட என்.சி.சி. சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு யோகா ஆசிரியைகள் அனுப்பி வைக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த யோகா பயிற்சிக்கு தலைமை ஆசிரியர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மேலும் மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. என்.சி.சி. அலுவலர் சுப்ரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஊட்டி ஆ.கே.புரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. யோகா பயிற்றுனர்கள் மாணவ-மாணவிகளுக்கு யோகாசனங்கள் செய்து காட்டி பயிற்சி அளித்தனர். இதில் அனைத்து மாணவ-மாணவிகளும் ஆர்வத்துடன் பங்கேற்று தினமும் தங்களது வீடுகளில் காலை வேளையில் யோகா பயிற்சி செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாணவ-மாணவிகளுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை பிரமீளா விளக்கி கூறினார். ஊட்டி அருகே உள்ள அதிகரட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் கலந்துகொண்டு உடலும், உள்ளமும் தூய்மை அடைந்திட யோகா செய்ய வேண்டும். பள்ளியில் மட்டுமல்லாமல் வீட்டிலும் யோகாவிற்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும். யோகா என்பது மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு துணை புரிகிறது. எனவே அனைவரும் யோகா கற்றுக்கொள்வது அவசியம் என்று பேசினார். மேலும் அவர் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து யோகாசனம் செய்தார். இதில் உடற்கல்வி ஆசிரியை பரமேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

குன்னூர் அருகே வெலிங்டனில் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் உள்ள நாகே‌‌ஷ் பேரக்சில் உலக யோகா தின விழா நடைபெற்றது. இதில் ராணுவ வீரர்கள் பலர் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். 
Tags:    

Similar News